உத்தரபிரதேசத்தில் மீரட் நகர் கன்டோன்மென்ட் சர்தார் பஜாரில் காளிபல்தான் என்னும் இடத்தில் 'ஆகர்நாத்' என்னும் பெயரில் சிவன் கோயில் கொண்டிருக்கிறார். இவரை தரிசித்தால் தேசப்பற்று அதிகரிக்கும்.
1857ல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ராணுவப்படையும், அவர்களின் குடியிருப்பும் இங்கு இருந்தன. படையில் இருந்த இந்திய வீரர்களை கருப்பு ராணுவம் (காளி பல்தான்) என ஆங்கிலேயர்கள் இழிவாக குறிப்பிட்டு வந்தனர். இதை இந்தியர்கள் எதிர்த்தனர். இந்நிலையில் துறவி ஒருவர் இங்குள்ள கோயிலுக்கு வந்திருந்தார். அவரிடம் இந்திய வீரர்கள் ஆலோசித்ததன் விளைவாக சிப்பாய் கலகம் உருவானது. சுதந்திர போராட்டத்திற்கு இதுவே வித்திட்டது. இதற்கு காரணமானவர்கள் மரண தண்டனை பெற்றனர். இதன்பின் இக்கோயில் பிரபலம் அடைந்தது. விஜய நகர மன்னர் கிருஷ்ண தேவராயர், மராட்டிய மன்னர்கள் திருப்பணிகள் செய்துள்ளனர். 1968ல் கோயில் புதுப்பிக்கப்பட்டு செவ்வக வடிவ அடுக்குகளின் மீது மூன்று தளங்களாக உள்ளது. 4 கிலோ எடை கொண்ட தங்கக் கலசத்துடன் கோபுரம் 2001ல் நிறுவப்பட்டது.
கருவறையில் சுயம்பு லிங்கமும், அதன் பின்புறம் சலவைக்கல்லால் ஆன சிவனும், பார்வதியும் நின்ற நிலையில் உள்ளனர். சிங்க வாகனத்தில் துர்கா, ராதாகிருஷ்ணர், மகாவிஷ்ணு, மகாலட்சுமி சன்னதிகள் உள்ளன. கோயிலின் பின்புறத்தில் சுதந்திரப் போராட்டத்தின் நினைவுச் சின்னம் உள்ளது. இங்கு சிப்பாய்க்கலகத்தை நினைவுபடுத்தும் விதமாக ஆண்டுதோறும் மே 10ல் விழா நடக்கிறது. சிரவண (ஆவணி) மாத திங்கட்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கும்.
எப்படி செல்வது: மீரட் சிடி சென்டரில் இருந்து 2.5 கி.மீ.,
விசேஷ நாள்: மகாசிவராத்திரி, ஹோலி கிருஷ்ண ஜெயந்தி
நேரம்: அதிகாலை 5:00 - 11:45 மணி; மதியம் 3:30 - 10:00 மணி
தொடர்புக்கு: 098971 08259
அருகிலுள்ள தலம்: மதுரா கிருஷ்ண ஜென்மபூமி 209 கி.மீ.,
நேரம்: அதிகாலை 5:00 - 12:00 மணி; மாலை 4:00 - 9:30 மணி
தொடர்புக்கு: 0565 - 242 3888