'நான் அதை சாதித்து விட்டேன், இதை சாதித்து விடுவேன்' என பலரும் பேசுவர். இதுவே சிறிய பிரச்னை வந்தால் போதும். 'என்னால் எதுவும் முடியவில்லையே' என புலம்புவர். இந்த மகிழ்ச்சியும், துன்பமும் எதனால் வருகிறது?
'நான்' என்ற ஆணவத்தை நீக்கினாலே, நிம்மதியான வாழ்க்கை அமையும் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.
* சாதனையோ, வேதனையோ எதுவுமே உங்கள் கையில் இல்லை.
* எதுவும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. உங்கள் பேச்சை உடல் கேட்குமா? முடி நரைப்பதையோ, உதிர்வதையோ தடுக்க முடியுமா? உண்ட உணவை நீங்களா ஜீரணம் செய்கிறீர்கள்? இதயம், கணையம், சீறுநீரகம் என உடல் உறுப்புகள் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதா?
* உங்களைக் கேட்டா மழை பொழிகிறது. உங்களைக் கேட்டா மரம் முளைக்கிறது. உங்களுடைய பொறுப்பிலா உலகம் சுழலுகிறது. நீங்கள் தான் கீழே விழாமல் கோள்களை பிடிப்பவரோ! மேலே சொன்ன எதுவும் உங்கள் பொறுப்பில் இல்லை. அனைத்தும் கடவுளின் கட்டுப்பாட்டில் உள்ளன. உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியில் கவனம் செலுத்துங்கள். அதில் வெற்றியோ, தோல்வியோ கடவுளிடம் விட்டுவிடுங்கள்.
* 'நம்மைத் தவிர ஏதுமில்லை' என நினைப்பது ஆணவம். 'நம்மிடம் ஏதுமில்லை' என நினைப்பது ஞானம். இதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.