கிராமங்களில் ''சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை'' என்ற பழமொழி உண்டு. இதிலிருந்தே சுப்பிரமணியன் என்ற பெயர் எவ்வளவு சிறப்புடையது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இவருடைய ஆறுபடை தலங்களில் பழநியை தவிர்த்து மற்ற கோயில்களில் எழுந்தருளி இருக்கும் சுவாமியின் திருநாமம் சுப்பிரமணியர் என்பதாகும். அவ்வூர் பெயரையும் சேர்த்து பல்வேறு கோயில்கள் பாலசுப்பிரமணியன், சுப்பிரமணியன் என்னும் பெயரே வழக்கத்தில் உள்ளன. சுப்ரமணியர் என்ற பெயரில் உள்ள 'பிரம்மண்யன்' என்ற சொல்லுக்கு மேலான பிரம்மத்தை உணர்ந்து ஞானத்தைப் பெற்றவர் என பொருள் கொள்வர். 'சு' என்ற
எழுத்திற்கு மேலான சுகத்தை செய்பவர். இவர் ஞானத்தின் வடிவம் என்பதால் தான் கையில் வேலை தாங்கி உள்ளார். அது அறிவின் அடையாளம்.
தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அறிவு என்பது ஆழமாகவும், அகன்றதாகவும், கூர்மையாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதே அதன் தத்துவம்.
சிவபெருமானுக்கு ருத்திரத்தையும், மகாவிஷ்ணுவிற்கு புருஸசூக்ததையும்
வைத்து வேதம் போற்றுகிறது. ஆனால் முருகன் மீது கொண்ட பக்தியின் காரணமாக அது சுப்பிரமண்யம், சுப்பிரமணியம், சுப்பிரமணியோம் என ஓசை கூட்டி ஒலிக்கிறது என்பர்.
திருச்செந்துார் கோயில் முருகனுக்கு விழா நடத்திடவும், நித்திய பூஜைக்காக வரகுண பாண்டியனால் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்றில் '' சுப்பிரமணிய பாடாராருக்கு'' என குறிக்கப்பட்டுள்ளது என்பது இங்கு சிந்திக்கதக்கது.
ஆதிசங்கரரின் முக்கிய சீடரான வித்யாரண்யர் இவ்வுலகை காப்பற்ற வந்த
மூர்த்தி சுப்பிரமண்யர் என்கிறார். சுத்தறிவு உடையவர் சுப்பிரமணியர் என்பார் வள்ளலார்.
சிவபெருமானே சுப்பிரமணியராக அவதரித்தார் என்கிறார் பாம்பன் சுவாமிகள். ஆதிசங்கரர், தொட்டிக்கலை முனிவர் போன்றோர் சுப்பிரமணியக்கடவுள் மீது பல திருநுால்களை இயற்றியுள்ளார். அந்நுால்களை படித்து பலன் பெற்றோரின் எண்ணிக்கை
கணக்கில் அடங்காது.
பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையானது திருவிசைப்பா. இதில் சேந்தனார் பாடிய பாடல் ஒன்றில் சுப்பிரமணியர் என்ற சொல் இடம் பெற்றுள்ளது பாருங்கள்.
''கோவினைப் பவளக் குழமணக் கோலக்
குழாங்கள் சூழ்கோழிவெல் கொடியோன்
காவல்நற் சேனையென் னக்காப் பவன்என்
பொன்னை மேகலை கவர்வானே?
தேவின்நற் றலைவன் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
துாவிநற் பீலி மாமயில் ஊரும்
சுப்பிர மண்ணியன் தானே.
கைத்தல நிறைகனி எனத்தொடங்கும் விநாயகர் துதிப்பாடலில் அருளாளரான அருணகிரிநாதர் பாடிய பாடலில்
''.....முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம்
அச்சது பொடி செய்த அதிதீரா
அத்துயர் அது கொடு சுப்பிரமணி படும்
அப்புனம் அதனிடை இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கணம் மணமருள் பெருமாளே''
என சுப்பிரமணியக்கடவுளைப் போற்றுகிறார்.