ஆந்திர மாநிலம் குண்டூர் நாசராவ்பேட்டை என்னும் ஊரில் உள்ளது திரிகொடேஷ்வர் கோயில். இக்கோயிலில் உள்ள சுவாமியை தரிசனம் செய்பவர்களுக்கு தெளிந்த ஞானம் உண்டாகும். இக்கோயிலுக்கு ஒரு முறை சென்று தரிசனம் செய்யுங்கள்.
கைலாயத்தில் தவம் மேற்கொண்ட சிவபெருமானிடம் பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்கள் அனைவரும் ஞானஉபதேசம் செய்ய வேண்டும் என கேட்டனர். அவர்களுக்காக அமர்ந்து உபதேசம் செய்த இடமே இம்மலை என்கிறது தலவரலாறு. அதனால் திரிகூட பர்வதம் என்கிற இம்மலைகளை முப்பெருந்தெய்வங்களாகிய பிரம்மா, விஷ்ணு, சிவனாகவே வழிபடுகின்றனர் இங்குள்ள பக்தர்கள். இம்மலையின் மீது கோயில் கொண்டுள்ள சுவாமி, திரிகொடேஷ்வர், கோடப்பா தெட்சணாமூர்த்தி என்ற திருநாமத்தில் அருள் செய்கிறார். இம்மலையில் சகோதரருடன் விறகு வெட்டி பிழைத்து வந்தார் சாலங்கயா என்னும் பக்தர். சிவபக்தரான இவர் சிறிய அளவில் சுவாமிக்கு கோயில் கட்டினார். இவரிடம் கொல்லபாமா என்ற பக்தருக்கு பூஜை நடந்த பிறகே தனக்கு பூஜை நடக்க வேண்டும் என அசரீரியாக சொன்னார் சிவபெருமான்.
அதன்படி இங்கு வழிபாடு நடைபெறுகின்றன. இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி விரதமிருந்து படிகள் ஏறி சுவாமியை வழிபாடு செய்பவர்களுக்கு விரும்பியது நடக்கும். குலோத்துங்கசோழன், கிருஷ்ணதேவராயர்கள், நாசராவ்பேட்டை, அமராவதி, சிலக்குரிப்பேட்டை ஜமீன்தார்கள் இக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்தும் மானியங்களும் வழங்கியுள்ளனர். மனஅமைதி பெற தியான மண்டபம் உள்ளது. மணப்பேறு, மகப்பேறு வேண்டி இங்கு பிரார்த்தனை நடைபெறுகின்றன. விநாயகர், மல்லிகார்ச்சுனேஸ்வரர், மார்க்கண்டேயர், துர்கா பைரவர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன.
எப்படி செல்வது: நாசராவ்பேட்டையில் இருந்து 13 கி.மீ.,
விசேஷ நாள்: பிரதோஷம், சிவராத்திரி
நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 7:00 மணி
அருகிலுள்ள தலம்: குண்டூர் மல்லேஸ்வரர் கோயில் 72 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 0863 - 255 6184