திருமாலும் பிரம்மாவும் ஆணவத்தால் நானே பெரியவன் என்ற நினைப்பில் சண்டையிட்டுக் கொண்டனர். அவர்களால் இன்று வரை சிவனின் திருமுடியாகிய சிரசையும், திருவடியாகிய பாதத்தையும் காண முடியவில்லை. ஒவ்வொரு மனிதரிடம் இருக்கும் நான் என்கிற ஆணவம் அழிய வேண்டும். அப்போது தான் அவருக்கு ஞானமெனும் ஜோதி தென்படும் என்ற தத்துவத்தை உணர்த்துவது திருவண்ணாமலை.
இத் தலம் பஞ்ச பூதங்களில் அக்னித்தலம். இங்கு எழுந்தருளியுள்ள அண்ணாமலையாரை நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரில் தொடங்கி எத்தனையோ அருளாளர்கள் பாடி வழிபாடு செய்துள்ளனர். சிவபெருமானே மலையாக உள்ள தலம் என்பார் திருச்சுழி ரமணர்.
ஞானிகளை வா வா என்று அழைக்கும் மலை அண்ணாமலை என போற்றுவார் மகான் சேஷாத்திரி. ஒவ்வொருவருக்கும் அகத்திலும் புறத்திலும் உள்ள குற்றங்களை போக்கி நற்கதி பெறுவதற்கு குருஉபதேசம் அவசியம். உலகத்திற்கே குருவாகிய அருணகிரி நாதர் சிவபெருமானுடைய ஐந்தெழுத்து மந்திரத்தை வெளிப்படையாகவே வைத்து அடியார்களுக்காக திருவண்ணாமலை திருப்புகழில் பாடியுள்ளார்.
இதோ அப்பாடலை நாமும் படிப்போம். குருவருளை பெறுவோம்.
செயசெய அருண அத்திரி சிவயநம,
செயசெய அருண அத்திரி மசிவயந,
செயசெய அருண அத்திரி நமசிவய, ... திருமூலா
செயசெய அருண அத்திரி யநமசிவ,
செயசெய அருண அத்திரி வயநமசி,
செயசெய அருண அத்திரி சிவயநம அஸ்த்து ... எனமாறி
செயசெய அருண அத்திரி தனில் விழி வைத்து,
அரகர சரண அத்திரி என உருகி,
செயசெய குரு பாக்கியம் என மருவி ... சுடர்தாளைச்
சிவசிவ சரண அத்திரி செயசெய என,
சரண் மிசை தொழுது ஏத்திய சுவை பெருக,
திருவடி சிவ வாக்கிய கடல் அமுதைக் ... குடியேனோ?
செயசெய சரண அத்திரி என முநிவர்க்
கணம் இது வினை காத்திடும் என மருவ,
செடமுடி மலை போற்று அவுணர்கள் அவியச் ... சுடும்வேலா!
திருமுடி அடி பார்த்திடும் என இருவர்க்கு,
அடிதலை தெரியாப் படி நிண, அருணச்
சிவசுடர், சிகி நாட்டவன் இரு செவியில்... புகல்வோனே!
செயசெய சரண அத்திரி எனும் அடியெற்கு,
இருவினை பொடி ஆக்கிய சுடர் வெளியில்
திருநடம் இது பார்த்திடும் என மகிழ் பொன் ... குருநாதா!
திகழ் கிளிமொழி பால் சுவை இதழ் அமுதக்
குறமகள் முலைமேல், புதுமணம் மருவிச்
சிவகிரி அருண அத்திரி தலம் மகிழ் பொன் ... பெருமாளே..