ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன், கேரள மாநிலம் திருச்சூரில் குடிகொண்டிருக்கிறார்.வடக்குநாதர் எனப்படும் இவருக்கு அபிேஷகம் செய்த நெய்யை சாப்பிட்டால் உடல் நலம் மேம்படும்.
ஆயிரத்து இருநுாறு ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்து சமயம் பல பிரிவுகளாக இருந்தது. ஆதிசங்கரர் அதனை ஒன்று சேர்த்து ஆறு சமயங்களாக வகுத்தார். இவரின் பெற்றோர்கள் வழிபாடு செய்த இத்தலத்திற்கு சென்று இங்கு உள்ள சிவனை வழிபட்டால் வாழ்வு சிறக்கும். வியாபாரம் செழிக்கும். மகாபாரதத்தோடு தொடர்புடையது இக்கோயிலின் வரலாறு.
மாறுவேடத்தில் இருந்த சிவனோடு சண்டை செய்த அர்ச்சுனன் வில்லால் அடிக்க அவரது நெற்றியில் ரத்தம் கசிந்தது. அதற்கு தன்வந்திரி பகவான் நெய் கொண்டு மருந்து இட்டார். மேற்கு பார்த்த கோயிலாக உள்ளது இத்தலம். இந்தியாவின் வடக்கே அமர்நாத்தில் பனி லிங்கம் இருப்பது போல தெற்கே இவ்வூர் கருவறையில் அருள் செய்யும் சிவபெருமான் நெய்யால் உருவானவர் என்பது சிறப்பு. இவருக்கு அபிேஷகம் செய்யப்படும் நெய் பிரசாதத்தை ௪௧ நாட்கள் தொடர்ந்து வாங்கிச் சாப்பிட்டால் நாள்பட்ட நோய், மலட்டுத்தன்மை நீங்கும். குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். சுற்றுப் பிரகாரத்தில் பார்வதி தேவியின் சன்னதி உள்ளது.
இத்தலத்தில் உள்ள சுவாமி அம்பாளை பரசுராமரும், தெற்குப் பகுதியில் உள்ள கணபதி, ராமர், நாராயணரை ஆதிசங்கரரும் பிரதிஷ்டை செய்துள்ளனர். இந்த ஐந்து தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் ஒன்று போல பூஜை நடைபெறும் இதைப்பார்ப்பதற்கு பரவசம் ஏற்படும். தினசரி நடைபெறும் அர்த்தஜாம பூஜையை தரிசிப்பவர்களுக்கு நினைத்தது கைகூடும். பிரபலமான பூரம் திருவிழா இங்கு நடைபெறுவதில்லை. மஹா சிவராத்திரி அன்று இக்கோயில் பிரகாரங்களை சுற்றி லட்ச தீபம் ஏற்றப்படுகின்றன.
கொச்சி மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இக்கோயிலை தரிசிப்பவருக்கு காசிக்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும்.
எப்படி செல்வது : கொச்சியில் இருந்து 84 கி.மீ.,
விசேஷ நாள்: ஆடிப்பூரம், மாசி சிவராத்திரி
நேரம்: அதிகாலை 4:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 91889 58014
அருகிலுள்ள தலம்: குருவாயூர் கிருஷ்ணன் கோயில் 26 கி.மீ.,
நேரம்: அதிகாலை 3:00 - 12:30 மணி; மாலை 4:00 - 10:00 மணி
தொடர்புக்கு: 0487 - 255 6335