குழந்தைக்கு குலதெய்வ கோயிலில் முடி காணிக்கை செலுத்துவது மரபு. அது போல குழந்தை கிருஷ்ணருக்கும் முடிகாணிக்கை செலுத்தியது எங்கு தெரியுமா...
ஹரியானா மாநிலத்திலுள்ள குருஷேத்திரம் காளி கோயில் தான் அது.
பாண்டவர்கள் முன்னோரின் அரசகுரு வாழ்ந்த இடம் குருஷேத்திரம். மகாபாரத போர் தொடங்குவதற்கு முன்பே இப்பகுதி பிரபலம். இந்நகரம் சரஸ்வதி, திருஷ்த் என்ற நதிகளுக்கிடையே உள்ளது. இது சக்தி பீடங்களில் ஒன்று. தட்சனின் மகளான தாட்சாயிணி தேவியின் கால் முறிந்து விழுந்த இடம் என்பதால் தேவியின் காலை சலவைக்கல்லில் வடித்து தாமரை பீடத்தில் மீது பிரதிஷ்டை செய்துள்ளனர். கருவறையில் அம்பாள் அலங்காரத்துடன் குடையின் கீழ் புன்னகை தவழ காட்சி தருகிறாள்.
இங்குதான் நந்தகோபரும், யசோதையும் பகவான் கிருஷ்ணருக்கு முதல் முடிகாணிக்கை செய்து வழிபட்டனர். சூரியகிரகணத்தன்று இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி அம்மனை தரிசனம் செய்தால் நுாறு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். அருகிலுள்ள பிரம்மசரோவர் என்னும் நதியில் பக்தர்கள் தர்ப்பணம் செய்கின்றனர். மூன்று வாசல்களை கொண்ட சர்வேஸ்வரர் கோயிலுக்கு போகும் வழியில் கீதை உபதேசக்காட்சி சிலை வடிவில் உள்ளது. இக்கோயில் சிவனை தங்கத்தாமரை இலைகளால் குந்தி அர்ச்சனை செய்துள்ளார். பாரத போர் துவங்கும் முன் கிருஷ்ணருடன் பாண்டவர்கள் வந்து ஸ்தானேஸ்வரரை வழிபாடு செய்துள்ளனர். கோயிலின் அருகிலுள்ள குளத்தில் நீராடி சிவனை வழிபட்டால் குருஷேத்திர பயணம் நிறைவேறும். பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்து உயிர் விட்ட இடம் பிரகாதாரி என்ற கிராமமாக தற்போதும் உள்ளது.
பலரும் அவ்விடத்திற்கு வந்து விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் செய்கின்றனர். எவரொருவர் குருஷேத்திரத்தை தரிசிக்க வேண்டும் என நினைக்கின்றாரோ அவருடைய பாவங்கள் அனைத்தும் அக்கணமே பொசுங்கி விடும்.
எப்படி செல்வது: டில்லியிலிருந்து 160 கி.மீ.,
விசேஷ நாள்: நவராத்திரி, அமாவாசை சூரியகிரகணம்,
நேரம்: அதிகாலை 5:00 - இரவு 8:00 மணி
தொடர்புக்கு: 0857 - 099 1111
அருகிலுள்ள தலம்: ஸ்தானேஸ்வரர் கோயில் 1 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - இரவு 7:00 மணி