ஆடு, மாடுகளுக்கு ஏற்படும் நோய்களை குணப்படுத்த நிரந்தரமாக ஒருவர் இருக்கிறார். அவர் யார் எங்கிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள அரியலுார் மாவட்டத்திற்கு வாருங்கள்.
1751ல் இப்பகுதியில் வாழ்ந்த பெரிய விவசாயி ஒருவரின் மேய்ச்சலுக்குச் சென்ற பசு திரும்பி வரவில்லை.
அதைத் தேடிய அவருக்கு ஏமாற்றம். அன்றிரவு அவரது கனவில் குறிப்பிட்ட இடத்திலுள்ள இருமரங்களுக்கு இடையே பசு நிற்கிறது என சொல்லி மறைந்தார் ஒரு பெரியவர். அதன்படியே அங்கு சென்ற அவருக்கு ஆச்சரியம்.
ஒரு கல் கம்பத்தின் மீது பாலை சொரிந்து நின்றது அப்பசு. பின்னர் மற்றொரு நாள் ''கவலைகள் நீக்கும் கலியுக வரதனாகிய பெருமாள் அக்கம்பத்தில் உள்ளார்'' என அவரது கனவில் வந்து சொன்னார் பெரியவர். அதனால் அக்கம்பத்தை நிலை நிறுத்தி வழிபாடு செய்ய தொடங்கினர் விவசாயி. இங்கு கம்பத்தில் பெருமாள் நாமத்தோடு உருவம் இல்லாமல் அருள் செய்கிறார் என்பதால் தாயாருக்கு தனிச்சன்னதி கிடையாது.
கம்பத்தின் கீழே உள்ள ஆஞ்சநேயர் கதை இல்லாமல் வடக்குமுகம் பார்த்து ருத்ர அம்சத்துடன் அருள் செய்கிறார். முதலில் விவசாயிகளுக்கு கிடைக்கும் விளைச்சலை இப்பெருமாளுக்கே அர்ப்பணிக்கின்றனர். விவசாயத்திற்கு உதவிய கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் நொடிகளை குணப்படுத்தும் தெய்வமாக திகழும் இப்பெருமாளை விவசாயிகளின் தோழன் என பக்தர்கள் அன்புடன் அழைக்கின்றார்கள். பெருமாளின் பத்து அவதார சிற்பங்கள் கோயிலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. இங்கு சொர்க்கவாசல் திறப்பு கிடையாது. உற்ஸவத்திருமேனியில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் கலியுக வரதராஜ பெருமாள் அருள் பாலிக்கிறார். இக்கோயிலில் நடைபெறும் தேர் திருவிழா பிரபலம். தலவிருட்சம் மாவிலங்கை மரம்.
எப்படி செல்வது: அரியலுாரில் இருந்து 5 கி.மீ.,
விசேஷ நாள்: புரட்டாசி சனிக்கிழமை, சிவராத்திரி ஸ்ரீராமநவமி, பங்குனி உத்திரம்
நேரம்: காலை 6:30 - 12:30 மணி; மதியம் 3:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 94435 15842; 04329 - 228 890
அருகிலுள்ள தலம்: சின்ன சேலம் சொர்ணபுரீஸ்வரர் 20 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - இரவு 9:00 மணி
தொடர்புக்கு: 94432 40127