குஜராத் மாநிலம் வாடி நகரில் துந்திராஜ் கணபதி என்னும் பெயருடன் விநாயகர் கோயில் கொண்டிருக்கிறார். இரு மனைவியர், இரு மகன்களுடன் அருள்புரியும் இவரை வழிபட்டால் நல்ல புத்தி, செயலில் வெற்றி, தொழிலில் லாபம் உண்டாகும். வெள்ளிக்கிழமைகளில் அர்ச்சனை செய்தால் தடைகளை தகர்ப்பதோடு சுபநிகழ்ச்சியை இனிதே நடத்திட அருள்புரிவார்.
மர வேலைப்பாடுகள் நிறைந்த இக்கோயில் 175 ஆண்டுகளுக்கு முன்பு திவான் கோபால்ராவ் மைரல் என்பவரால் கட்டப்பட்டது. பளிங்கு கல்லால் ஆன மூலவருடன், மனைவியரான ரிதி (புத்தி), சித்தியும், மகன்களான லாப் (லாபம்), லக்ஷ் (சுபம்) ஆகியோரும் உள்ளனர். தொந்தியுடன் காட்சி தரும் இவர் 'துந்திராஜ்' (தொப்பையப்பர்) என செல்லமாக அழைக்கப்படுகிறார். நான்கு துாண்கள் கொண்ட மண்டபமாக கருவறை உள்ளது. இங்குள்ள கல்வெட்டில் 'துந்திராஜ் கணபதி மிக சக்தி மிக்கவர்' எனக் குறிக்கப்பட்டுள்ளது.
வாகனமான மூஞ்சூறு பளிங்கு மண்டபத்தில் காலை உயர்த்தியபடி மோதகத்தை சாப்பிடும் நிலையில் உள்ளது. சங்கடஹர சதுர்த்தியன்று அதன் காதில் வேண்டுதல்களைச் சொன்னால் விருப்பம் விரைவில் நிறைவேறும். கருவறையின் எதிரில் நீரூற்று ஒன்றுள்ளது.
44 ஆயிரம் சதுரடி கொண்ட இக்கோயில் இரண்டு அடுக்குகள் கொண்டது. குஜராத், மராத்திய கலாசார பின்னணியில் நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள் வண்ணங்கள்
கோயில் முழுவதும் பூசப்பட்டுள்ளன. அற்புதமான சிற்பங்கள், சிலைகள் நிறைந்துள்ளன. குழந்தைகள் விளையாட பூங்கா ஒன்றும் உள்ளது.
எப்படி செல்வது: சென்னையில் இருந்து வதோதரா (பரோடா) 1746 கி.மீ., இங்கிருந்து 64 கி.மீ.,
விசேஷ நாள்: விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி
நேரம்: காலை 6:00 - இரவு 8:00 மணி
அருகிலுள்ள தலம்: அக் ஷர்தாம் சுவாமி நாராயண் மந்திர் 140 கி.மீ.,
நேரம்: காலை 9:00 - இரவு 7:30 மணி
தொடர்புக்கு: 079 - 2326 0001