கேளுங்க சொல்கிறோம்
மே 26,2023,10:56  IST

பி.ராமராஜன், வள்ளியூர், திருநெல்வேலி.
*அன்னதானம் செய்தால் பாவம் தீருமா?
நிச்சயமாக தீரும். ஆனால் அறிந்தே பாவம் செய்தவருக்கு பலனளிக்காது.

எஸ்.மணிகண்டன், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்.
*சீறி வந்த நல்ல பாம்பை அடித்த போது தப்பித்து விட்டது. பரிகாரம் என்ன?
செவ்வாயன்று ராகுகாலத்தில் (மதியம் 3:00 - 4:30 மணி) முருகனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்.

கே.சந்திரா, வில்லிவாக்கம், சென்னை.
*அங்கப்பிரதட்சணம் செய்வது ஏன்?
உலகமே கைவிட்ட நிலையிலும் மனம் தளராமல் 'நல்லதே நடக்கும்' என்ற நம்பிக்கையுடன் கடவுளைச் சரணடைந்து முறையிடுவது அங்கப்பிரதட்சணம்.

ஆர்.கேசவன், ராஜபாளையம், விருதுநகர்.
*கடவுள் வழிபாட்டில் மிருகங்களை பலியிடலாமா?
பலியிடக் கூடாது. 'அன்பே சிவம்' என்கிறார் திருமூலர். நாமும் அதைப் பின்பற்றி வழிபடுவது நல்லதே.

எல்.கிருஷ்ணவேணி, புவனகிரி, கடலுார்.
*ஸ்ரீராமரை இளைஞராகவும், கிருஷ்ணரை குழந்தையாகவும் வழிபடுவது ஏன்?
ராமர் இளைஞராக இருந்த போது ராவணனை அழித்தார். கிருஷ்ணர் குழந்தையாக இருந்த போது பூதனை, காளிங்கன் என்ற அசுரர்களை அழித்தார். இதை போற்றும் விதமாக நாமும் வழிபடுகிறோம்.

எம்.பரமேஸ்வரன், ஜனக்புரி, டில்லி.
*கோயிலில் பூப்போட்டு பார்த்து திருமணம் நடத்தலாமா?
பெரியவர்கள் சம்மதத்துடன், மணமக்கள் ஒருவரை ஒருவர் ஏற்க முன்வந்தால் மட்டுமே பூப்போட்டு பார்த்து திருமணம் நடத்தலாம்.

டி.வைசாலி, சென்னபட்னா, பெங்களூரு.
*பூஜையின் போது நேரும் தவறுகளை சரிசெய்ய என்ன செய்யலாம்?
பூஜை முடிந்ததும் மூன்று முறை சுவாமியை வலம் வந்து, ஐந்து முறை விழுந்து நமஸ்காரம் செய்யுங்கள்.

வி.மகாலிங்கம், மறைமலைநகர், காஞ்சிபுரம்.
*வாழ்வில் இகபர சுகம் பெற வழியுண்டா?
இகம் என்றால் மண்ணுலக வாழ்க்கை. பரம் என்றால் விண்ணுலக வாழ்க்கை. இரண்டிலும் துன்பம் இன்றி வாழ்வதே இகபர சுகம். கடவுளின் திருவடியைச் சரணடைந்தால் அந்நிலை கிடைக்கும்.

கே.விக்னேஷ், வில்லுக்குறி, கன்னியாகுமரி.
*சடாரியை தலையில் வைப்பது ஏன்?
பெருமாளின் திருவடியைத் தாங்கி நிற்பது சடாரி. இதை தலையில் தாங்கினால் காமம், குரோதம், பேராசை, மயக்கம், ஆணவம், பொறாமை எனும் ஆறு தீயகுணங்கள் நீங்கும்.

எம்.நிவேதா, வடக்கிபாளையம், கோயம்புத்துார்.
*இறந்த நபர் மீண்டும் இறப்பது போல கனவு வந்தால்...
நடந்ததை அடிக்கடி சிந்திப்பதால் மனதில் ஏற்பட்ட தாக்கமே கனவாக வருகிறது. இதை பொருட்படுத்தாதீர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X