கொல்லிமலை அறப்பலீஸ்வரர் - வில்வம்
சேர மன்னர்கள் ஆட்சி செய்த மலை கொல்லிமலை. சங்க நுால்களான அகநானுாறு, புறநானுாறு, நற்றிணையில் இந்த மலையைப் பற்றி கூறப்பட்டுள்ளது. 'குடவர் ஆட்சி புரிந்த கொல்லிமலை' என்கிறது சிலப்பதிகாரம். கொல்லிமலை சித்தரின் பூமியான இந்த மலையெங்கும் கருநெல்லி, கருநொச்சி, ஜோதிபுல் போன்ற மூலிகைகள் விளைகின்றன. சிற்பியான மாயன் என்பவர், அழகிய பெண் சிலை ஒன்றைச் செதுக்கி, அங்கு வரும் அசுரர்களை எல்லாம் அதன் மூலம் கவர்ந்திழுத்து மயக்கி கொலை செய்து வெற்றி பெற்றார். அதனால் இத்தலம்,'கொல்லிப்பாவை' எனப் பெயர் பெற்றது.
இப்பகுதியை ஆட்சி புரிந்த மன்னரான வல்வில் ஓரியின் சிலை இங்குள்ளது. ஒரே அம்பில் பல விலங்குகளை வீழ்த்தும் திறமை கொண்டதால் இவர், 'அறப்பள்ளி' எனப் பெயர் பெற்றார். கொல்லி, குளிர்அறப்பள்ளி, கல்லால், கமல்கொல்லி, அறைப்பள்ளி என்று இத்தலத்தின் பெயர்கள் உண்டு.
வளம் மிக்க கொல்லிமலை சிவன் கோயில் 2000 ஆண்டுகள் பழமையானது. கருவறையில் சுயம்பு லிங்கமாக சுவாமி காட்சியளிக்கிறார். விவசாயி ஒருவர் நிலத்தை உழும் போது கலப்பையில் அகப்பட்ட சிவலிங்கம் இது. அதைக் கண்டெடுத்த விவசாயி வில்வ இலைகளால் பூஜை செய்து மகிழ்ந்தார். இன்றும் சிவலிங்கத்தின் மீது கலப்பை மோதிய தழும்பை காணலாம். சுவாமியின் திருநாமம் அறப்பலீஸ்வரர், அம்மனின் பெயர் தாயம்மை. விநாயகர், முருகனுக்கும் சன்னதிகள் உள்ளன. சித்தர்கள் தங்கிய குகைகளை இக்கோயிலில் காணலாம். கோரக்கர், காளங்கி நாதர்கள் தவமிருந்த குகைகள் இங்குள்ளன.
ஒருமுறை பக்தர் ஒருவர் ஆற்றில் மீன் பிடித்து சமைக்கத் தொடங்கினார். கொதிக்கும் குழம்பில் இருந்த மீன் தாவிக் குதித்து சிவனருளால் பிழைத்தது. இறந்த மீனுக்கு உயிர் கொடுத்ததால், 'அறுத்த மீனை உயிர் பிழைக்க வைத்த அறப்பலீஸ்வரர்' என சிவன் பெயர் பெற்றார். இங்கு ஓடும் பஞ்சநதியில் மீன்களுக்கு தானியங்களை வழங்கிய பின்னரே சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
அறப்பலீஸ்வரர் கோயிலின் தலவிருட்சம் வில்வம். ஏஜில் மார்மிளோஸ் என்னும் தாவரவியல் பெயர் கொண்ட ருடேசியே குடும்பத்தைச் சேர்ந்தது இது.
அகத்தியர் பாடிய பாடல்
பல்லவம்பூ பிஞ்சின் பழநிரியம்சம் முறையே
வல்லவம் மேகமந்த மாகுன்மம் - செல்லுகின்ற
நோக்கமருள் விந்துநட்ட நுாறு மடுத்தவர்கட்
காக்கமருள வில்லுவத்தி லாம்.
வில்லுவத்தின் வேருக்கு வீறுகுன்ம வாயுகபம்
சொல்வொணா பித்தந் தொடர்சோபை - வலகப
தாகசுரம் நீரேற்றஞ் சந்நியோடு மெய்வலியும்
வேகமொடு நீங்குமே.
அக்கினி மந்தம் அரோசிந்தி சாரம்விக்கல்
நிற்கரிய பித்தசுரம் நீள்வாந்தி - கட்கநோய்
ஆகிய நோய் ஏகும் அழகோடு புஸ்டியுண்டம்
கோதிவில்வ வேரதனைக் கொள்.
வில்வ மரத்தின் தளிர் இலைகளை வாட்டி, மெல்லிய துணியில் முடிந்து ஒத்தடம் இட்டால் கண்ணில் ஏற்பட்ட சிவப்பு நீங்கும். வில்வத்தின் வேரை கஷாயம் செய்து குடித்தால் வயிற்றுவலி, பசியின்மை, சுவையின்மை, கழிச்சல், விக்கல், காய்ச்சல், வாந்தி, உடல் இளைப்பு குணமாகும். கஷாயத்துடன் நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் உடம்பு குளிர்ச்சி பெறும். வயிற்று புண் ஆறும். அடிக்கடி வெளிப்படும் சிறுநீர் கட்டுப்படும். வில்வ இலையை அரைத்து குடித்தால் ரத்தக்கொதிப்பு கட்டுப்படும்.
-தொடரும்
ஜெ.ஜெயவெங்கடேஷ்
98421 67567
jeyavenkateshdrs@gmail.com