ஒருவருக்கு இருக்க வேண்டிய முக்கிய குணங்களில் ஒன்று தைரியம். ஏனென்றால் தைரியம் இல்லாதவரிடம் மற்ற நல்ல குணங்கள் இருந்தாலும் அது பயன்படாது. பலரும் வாழ்வில் மகிழ்ச்சியை உணர்வதைவிட அதிகம் பயத்தையே உணர்கின்றனர். இதைத்தான் மகாகவி பாரதியார் 'அச்சம் தவிர்' என்கிறார். சரி. இதை எப்படி தவிர்ப்பது என்று தவிப்பவரா நீங்கள். திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள எல்லைக்காளியம்மன் கோயிலுக்கு வாருங்கள்.
காளி என்றதும் கழுத்தில் கபால மாலை, சிவந்த கண்கள், நீட்டிய நாக்கு போன்ற அச்சுறுத்தும் தோற்றம்தான் நினைவிற்கு வரும். இப்படி இவள் பயங்கரமான தோற்றத்துடன் காணப்பட்டாலும் பக்தனிடத்தில் ஒரு தாயைப்போன்றே அன்பு காட்டுவாள்.
கிரிவலப்பாதையில் உள்ளது கோயில். எளிமையான கோயில் என்றாலும் அங்கு செய்யப்படும் வழிபாடு சக்தி வாய்ந்தவை. இங்கு மாகாளி, பத்ரகாளி, அங்காளி என தேவதையாக இருந்து அருள்பாலிக்கிறாள் காளி. இவளது இரு விழிகளும் நமக்கு புதிய வழிகளை காட்டும். இவளது பார்வை மனதில் உள்ள பயத்தை அழிக்கும்.
சரி! அவளது அருளைப் பெற என்ன செய்யலாம் என யோசிக்காதீர்கள். எலுமிச்சம்பழம் போதும். அதோடு நல்ல மனம் இருந்தால் போதும். ஆனந்தம் இன்றே ஆரம்பமாகிவிடும்.
முன்பு சுடுகாடாக இருந்த இடம் இது. இங்கு கீற்றுக் கொட்டகையின் கீழ் அமர்ந்திருந்தாள் இந்தக் காளி. அப்போது இந்த ஊர் இன்னும் செழிப்பாகவும், சிலிர்ப்பாகவும் இருந்தது. ஆனால் காளியின் உக்கிரம் இன்றும் அப்படியே தான் உள்ளது. ஆம்! இன்றும் தீய குணம் கொண்ட மனிதர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்களை திருத்த வேண்டும்தானே.
எப்படி செல்வது: திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ.,
விசேஷ நாள்: அமாவாசை, செவ்வாய், வெள்ளி
தொடர்புக்கு: 88701 90206
நேரம்: அதிகாலை 5:00 - 1:00 மணி; மாலை 4:00 - 9:00 மணி
அருகிலுள்ள தலம்: சந்தவாசல் கங்கையம்மன் கோயில் 50 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - 10:30 மணி; மாலை 4:30 - 8:30 மணி
தொடர்புக்கு: 96773 41227, 0418 - 124 3207