பாவம் செய்தவரை பார்த்து சிறு புண்ணியமாவது செய்துள்ளாரா, பசித்தவனுக்கு உணவும், பசுவிற்கு இலை தழைகளாவது கொடுத்துள்ளாரா, புனித நதிகளில் நீராடியுள்ளாரா, பித்ரு காரியங்களையாவது கடைப்பிடித்துள்ளாரா இல்லை திருவெள்ளறை கோயில், கொக்கராயன் பேட்டை கோயில்களையாவது இவர் தரிசனம் செய்துள்ளாரா என மேலோகத்தில் கேட்பார் எமதர்மராஜா. அதற்கு ஆம் என சொன்னால் பாவம் நீங்கும் என்கிறது கருடபுராணம். வாங்க நாமும் கொக்கராயன்பேட்டை கோயிலுக்கு செல்வோம்.
சிவனுக்கு இசைக்கப்படும் வாத்தியங்களில் ஒன்று கொக்கரை. இக்கோயில் பூஜையின் போது இது இசைக்கப்பட்டதால் 'கொக்கரை விரும்பியோன்' என இங்குள்ள சிவபெருமான் அழைக்கப்படுகிறார். அதனால் இந்த இடத்திற்கு கொக்கரையான்பேட்டை என பெயர் வந்தது. கோயில் முகப்பிலுள்ள ராஜகோபுரம் நம்மை வரவேற்கும். கருவறையில் உள்ள ஏழு அடி சிவலிங்கத்தை பிரம்மா பூஜை செய்துள்ளார். அதனால் இவரை பிரம்ம லிங்கேஸ்வரர் என பக்தர்கள் அழைக்கின்றனர். அனைவருக்கும் அருள் வழங்கும் அம்பிகையின் திருநாமம் சவுந்தரநாயகி. கோயிலில் அமைந்துள்ள லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா சன்னதிகளுக்கு பின்னால் கற்கதவுகள் உள்ளன. அந்த கதவில் உள்ள கற்கோழி கூவினால் கதவு திறக்கும் எனவும், அது திறந்தால் கலியுகம் முடியும் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இக்கோயிலை முதலாம் குலோத்துங்க மன்னன் திருப்பணியும், மன்னர் கிருஷ்ணதேவராயர் இங்குள்ள சிவபெருமானை தரிசனமும் செய்துள்ளார்கள். பாமா,ருக்மணி சமேதராக வேணுகோபால சுவாமி எதிரே அனுமனுடன் காட்சி தருகிறார். இக்கோயிலில் உள்ள வடுகபைரவர் எட்டு கைகள், தலையை சுற்றி தீ பிழம்பு, மார்பில் பூணுாலாக பாம்பினை அணிந்தும், நாய் வாகனம் இல்லாமல் காட்சி தரும் இவர் பக்தர்களின் மனக்குறைகளை தீர்த்து வைக்கிறார்.
அஷ்டமி நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றன. விநாயகர், முருகன், துர்கை, சூரியன் முதலான சன்னதிகள் உள்ளன.
எப்படி செல்வது: பள்ளிப்பாளையத்தில் இருந்து 10 கி.மீ.,
விசேஷ நாள்: தமிழ் மாத பிறப்பு நவராத்திரி, சிவராத்திரி, பிரதோஷம்
நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 5:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 98422 27373, 94422 25421
அருகிலுள்ள தலம்: மாரியம்மன் கோயில் 0.5 கி.மீ.,
நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி