உண்மையாக இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். ஆனால் சிலர் அதன்படி நடப்பதில்லை. அதிலும் சிலர் பொய் சத்தியம் செய்து பிறரை ஏமாற்றுகின்றனர். இப்படி பொய்யான மனிதர்களுக்கு தண்டனை கொடுக்க ரெடியாக இருக்கிறார் ஆந்திர மாநிலம் சித்துார் காணிப்பாக்கத்தில் உள்ள விநாயகர்.
முன்பு இப்பகுதியில் பேசமுடியாத, பார்க்க முடியாத, கேட்க முடியாத மூன்று சகோதரர்கள் விவசாயம் செய்து வந்தனர். அங்குள்ள கிணற்றில் நீர் வற்றியதால், தோண்ட ஆரம்பித்தனர். அப்போது ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டது. அந்த இடத்தில் விநாயகரின் சிலை இருந்தது. எந்தவொரு முயற்சி செய்தும் சிலையை வெளியே எடுக்க முடியவில்லை. எனவே கிணற்றுக்குள் இருந்த விநாயகருக்கு இளநீரால் அபிஷேகம் செய்தனர். அந்த இளநீர் அருகில் இருந்த காணி நிலத்திற்குள் பாய்ந்ததால், அந்த இடத்திற்கு காணிப்பாக்கம் என பெயரிட்டனர். பிறகு கிணற்றுக்குள்ளேயே விநாயகரைச்சுற்றி சன்னதி எழுப்பினர். தற்போது புதிய இடத்தில் கிணற்றில் உள்ள விநாயகரை கொண்டு, கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கிணற்று நீர்தான் இத்தலத்தின் தீர்த்தம்.
இந்த விநாயகர் முன் தினமும் மாலையில், 'சத்தியப்பிரமாணம்' என்னும் நிகழ்ச்சி நடக்கிறது. சிறிய குற்றம் செய்தவர்கள் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு, விநாயகரிடம் மன்னிப்பு கேட்டால் பிரச்னை இல்லை. மீறினால் கடும் தண்டனை உண்டு. இப்பகுதி மக்கள் இவரை தங்கள் தலைமை நீதிபதியாகவே கருதி வழிபடுகின்றனர்.
கணவன் மனைவி பிரச்னை, கொடுக்கல் வாங்கல் தகராறு, உடல்நலம் சரியில்லாதவர்கள் விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர். இங்கு நாகர் சன்னதியும் உள்ளது. இவரை வணங்கினால் நாகதோஷம் தீரும். இக்கோயிலின் மற்றொரு சிறப்பும் உண்டு. குழந்தைக்கு பெயர் வைத்தல், முதன் முதலாக சோறு ஊட்டுதல் போன்ற வைபவங்களும் இங்கு நடக்கிறது. பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவதால் இவர், 'வரசித்தி விநாயகர்' ஆனார்.
எப்படி செல்வது
* சித்துாரில் இருந்து 15 கி.மீ.,
* திருப்பதியில் இருந்து 70 கி.மீ.,
விசேஷ நாள்: சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி
நேரம்: காலை 6:00 - 1:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 08573 - 281 540, 281 640, 281 747
அருகிலுள்ள தலம்: திருப்பதி சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் 58 கி.மீ.,
நேரம்: அதிகாலை 5:00 - இரவு 8:00 மணி
தொடர்புக்கு: 0877 - 210 0105