பசுபதி நாதர் கோயில் என்றால் நேபாளத்திலுள்ள சிவன் கோயில் தான் ஞாபகத்திற்கு வரும். மத்திய பிரதேசத்தில் மாண்ட்சோர் நதிக்கரையில் அமைந்துள்ள பசுபதிநாதர் கோயில் பற்றி தெரியுமா...
இக்கோயில் உருவாவதற்கு முன் இங்கு வாழ்ந்த சிவபக்தர் ஒருவர் துணி துவைத்து கொடுக்கும் தொண்டினை செய்து வந்தார். அவரது கனவில் நீ பயன்படுத்தும் கல்லானது என் சிலையே. இதை மன்னரிடம் தெரிவித்து கோயில் கட்டுங்கள் என சிவபெருமான் தெரிவித்தார்.
மன்னர் கனவிலும் இவ்வாறு சுவாமி சொல்லவே, அனைவரும் வந்து நதிக்கரையில் கல்லாக இருக்கும் சிவலிங்கத்தை எடுக்க முயற்சித்தனர்.
ஆனால் முடியவில்லை. அன்றிரவு சிவபெருமானின் வாக்குப்படி இருக்கும் இடத்திலேயே பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர்.
இக்கோயிலின் கோபுரம் முக்கோண வடிவில் கம்பீரமாய் காட்சி தருகிறது. இந்த எட்டு முக பசுபதிநாதரை வழிபடுபவர்கள் அன்பு, ஒழுக்கம், பக்தி, மகிழ்ச்சி, தர்மசிந்தனை, பொறுமை, பெருந்தன்மை, ஞானம் ஆகிய நற்குணங்களை பெறுகின்றனர். கருவறையில் சுவாமியை நான்கு முகங்கள் மேலே பார்த்தும் நான்கு முகங்கள் கீழே பார்த்தும் அமைத்துள்ளனர்.
இந்த எட்டு முகங்களுக்கும் தனித்தனி பெயர்கள் உண்டு அவை பவா, பசுபதி, மகாதேவா, இசனா, ருத்ரா, சாயா, உக்ரா, ஆசனி என்பன. ஐந்தாம் நுாற்றாண்டுக்கு முற்பட்ட கோயில் இது. திங்கள் கிழமை தோறும் இவருக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. உங்கள் வேண்டுதல்கள் கட்டாயம் பலிக்கணுமா அஷ்ட மூர்த்தியாய் அருளும் பசுபதிநாதரை வழிபடுங்கள்.
எப்படி செல்வது: இந்துாரில் இருந்து 207 கி.மீ.,
விசேஷ நாள்: கார்த்திகை ஏகாதசி மஹாசிவராத்திரி
நேரம்: காலை 6:00 - இரவு 8:00 மணி
தொடர்புக்கு: 074 - 2220 5288
அருகிலுள்ள தலம்: சித்தேஸ்வரர் மகாதேவ் கோயில் 12 கி.மீ.,
நேரம்: அதிகாலை 5:00 - 1:00 மணி; மாலை 5:00 - 10:00 மணி
தொடர்புக்கு: 02389 - 745 920