கே.ரவி, சிதம்பரம், கடலுார்.
*மனதில் நிம்மதி இல்லையே... என்ன செய்யலாம்?
தேவையற்ற பொருட்களால் வீடு குப்பையாகிறது. கூடாநட்பு, பேராசையால் மனம் குப்பையாகிறது. நிம்மதி வேண்டும் என்றால் குப்பையை துாக்கி எறியுங்கள்.
எம்.உஷா, திருநகர், மதுரை.
*அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ எந்தக் கடவுளை வழிபட வேண்டும்?
எந்தக் கடவுளையும் வழிபடலாம். ஆசைகளைக் குறையுங்கள். அமைதியாகவும், ஆனந்தமாகவும் வாழலாம்.
ஏ.சுந்தரராமன், வில்லிவாக்கம், சென்னை.
*கணவரின் விருப்பம் இல்லாமல் பீமரதசாந்தி நடத்தலாமா?
சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் ஆகியவையும் திருமணங்களே. இவற்றை தம்பதியராக சேர்ந்து நடத்துவதே முறை.
எம்.சீதாராமன், பணகுடி, திருநெல்வேலி.
*கடவுளிடம் நம் பிரார்த்தனைகளை எப்படி கேட்க வேண்டும்?
பிரார்த்தனைகளை உரிமையுடன் கேட்கலாம். கேட்டதையெல்லாம் கடவுள் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடாது. நமக்கு எது தேவையோ அதை அவர் தருவார்.
எஸ்.சுப்பிரமணியன், உடுமலைப்பேட்டை, திருப்பூர்.
*கோயிலில் கேட்பாரற்றுக் கிடக்கும் நந்தவனப் பூக்களை பூஜைக்கு உபயோகிக்கலாமா?
பூக்களை மாலையாகத் தொடுத்து அந்த கோயிலில் நடக்கும் பூஜைகளுக்குக் கொடுங்கள். உங்களுக்கு புண்ணியம்.
கே.நிவாஸ், கனகபுரா, பெங்களூரு.
*சரியை, கிரியை, யோகம், ஞானம் என்றால் என்ன?
பூஜைகளுக்கு உதவுதல் சரியை. பூஜை செய்தல் கிரியை. பிராணாயாமம் உள்ளிட்ட பயிற்சிகளில் ஈடுபடுதல் யோகம். இவற்றால் பெறப்படும் பக்குவமே ஞானம்.
எஸ்.ராஜாமணி, தென்தாமரைக்குளம், கன்னியாகுமரி.
*தினந்தோறும் விளக்குத் திரியை மாற்ற வேண்டுமா?
தேவையில்லை. முடிந்த வரை உபயோகிக்கலாம்.
எம்.செல்லம், வேடசந்துார், திண்டுக்கல்.
*சில ஆண்டாக குலதெய்வ வழிபாடு தடை பட்டுள்ளது. மீண்டும் தொடர என்ன வழி?
விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்து விட்டு குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.
க.கோகிலா, சாந்தினிசவுக், டில்லி.
*சிறு கோயில்களில் தினமும் எத்தனை முறை பூஜை நடத்த வேண்டும்?
காலை மட்டும் (ஒரு காலம்) அல்லது காலை, மாலை (இரு காலம்) பூஜை நடத்தலாம்.
எல்.பிச்சமுத்து, கடப்பேரி, செங்கல்பட்டு.
*விசேஷ வீடுகளில் வாழை, கரும்பு தோரணம் கட்டுவது ஏன்?
சுபநிகழ்ச்சிக்கு செல்லும் போது நாம் அலங்காரம் செய்து கொண்டு தானே செல்வோம். அது போலத்தான் வீடும். இது மங்கலத்தின் அடையாளம்.