செப். 8 தேவமாதா பிறந்தநாள்
பிரான்சில் லூர்து, போர்ச்சுக்கல்லில் பாத்திமா, இந்தியாவில் வேளாங்கண்ணி ஆகியவை, அன்னை மரியாள் காட்சி அளித்த தலங்களில் முக்கியமானவை. நாகப்பட்டினத்தில் இருந்து 10கி.மீ., தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
17ம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியரால் 24 அடிநீளமும், 12 அடி அகலத்தில் உருவாக்கப்பட்டு, 1920ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதே ஆண்டு செப்டம்பர் 8ல், அன்னையின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு, ஆலயம் புனிதம் செய்யப்பட்டது. இந்த சிற்றூரில். மாதா மூன்று முறை காட்சி அளித்திருக்கிறாள்.
16ம் நூற்றாண்டில், இடையர் சிறுவன் ஒருவன் வேளாங்கண்ணியில் இருந்து நாகப்பட்டினத்தில் உள்ள பண்ணையாருக்கு பால் கொண்டு சென்றான். களைப்பால் அங்குள்ள குளத்தின் அருகேயுள்ள ஆலமரத்தடியில் தூங்கிவிட்டான். அப்போது அழகே உருவான மங்கை ஒருத்தி, தன்னிலும் அழகான ஒரு குழந்தையுடன் காட்சி அளித்தாள். திடுக்கிட்ட சிறுவன், மங்கை கேட்டதற்கிணங்க, தான் வைத்திருந்த பாலைத் தயக்கமின்றி குழந்தைக்கு கொடுத்தான். மங்கையும், குழந்தையும் மறைந்தனர். நாகையில் உள்ள பண்ணையாரை சந்தித்த சிறுவன், அவரிடம் விபரம் கூறினான். பண்ணையார் நம்ப மறுத்தார். அப்போது பால் செம்பு தானாக நிரம்பி வழிந்தது. அதிசயித்த அனைவரும், அன்னை காட்சி கொடுத்த வேளாங்கண்ணி குளக்கரைக்கு வந்தனர். அந்தக் குளம்,"மாதா குளம்' என்றானது. இன்றும் அதே பெயருடன் புனிதமாக அழைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
17ம் நூற்றாண்டில், வேளாங்கண்ணியில் ஏழைப்பெண்ணின் மகன், கால் ஊனத்துடன் பிறந்தான். நடுத்தீட்டு என்ற இடத்தில் மோர் விற்றுக் கொண்டிருந்தான். அப்போது ஒரு மங்கை, குழந்தையுடன் தோன்றி மோர் கேட்டாள். தான் காட்சி கொடுத்த இடத்தில் ஒரு ஆலயம் எழுப்பும்படி, நாகையில் உள்ள ஒரு கிறிஸ்தவரிடம் கூறும்படி சிறுவனிடம் கேட்டுக் கொண்டாள். அந்த சிறுவனோ, தன்னால் அவ்வளவு தூரம் செல்ல முடியாது என்று வருத்தப்பட்டான். அன்னை அவனிடம், "எழுந்திரு' என்றாள். அவனும் எழுந்து நடந்தான். நாகை கிறிஸ்தவ செல்வந்தரிடம் சென்று மகிமைகளைக் கூறினான். நடுத்தீட்டில் கோயில் எழுப்பப்பட்டது.
போர்ச்சுக்கல் நாட்டு வியாபாரக் கப்பல் ஒன்று, சீனாவின் மக்காவ் என்ற துறைமுகத்தில் இருந்து கொழும்பிற்கு பயணமானது. நடுக்கடலில் புயலில் சிக்கியது. அவர்கள் தேவதாயின் அடைக்கலம் நாடி பிரார்த்தித்தனர். ஆபத்தான இந்த நேரத்தில் எங்கு கரை சேர்கிறோமோ, அங்கு அன்னைக்கு கோயில் எழுப்புவதாக வாக்களித்தனர். மாதா பிறந்தநாளான செப்., 8ல், பத்திரமாக வேளாங்கண்ணியில் கரை சேர்ந்தனர். இந்த இடத்தில் ஏற்கனவே இருந்த அன்னையின் சிறியகோயிலை பெரிய கோயிலாக மாற்றினர்.
ஆலயத்தில் இருந்து, ஒரு கி.மீ., தூரத்திலுள்ள மாதா குள தீர்த்தம் மகிமை மிக்கது. ஆலயத்தின் முன் பகுதியில் வலப்பக்கத்தில் 7 மாடங்கள் பேரழகுடன் அமைக்கப்பட்டுள்ளன.
தினமும் காலை 5.45, 6,45, 10 மணி மற்றும் மதியம் 12, மாலை 6மணிக்கு சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்படும். இத்திருப்பலிகள் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் நடக்கும். மாடி கட்டிடத்தில் தினமும் காலை 8 முதல் மாலை 6 மணி வரை திவ்ய நற்கருணை ஆராதனை நடக்கும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தை ஆரோக்கிய அன்னைக்கு "சிறப்பு வணக்கம்' செலுத்துகின்றனர். இம்மாதத்தில் தினமும் மாலை 5.45 மணிக்கு திருத்தேர் பவனி நடக்கும். செப்., 8ல் அன்னையின் தேர்பவனி பிரம்மாண்டமாக நடக்கும்.