கண்ணன் கதைகள் (21)
அக்டோபர் 01,2012,15:32  IST

உள்ளம் கவர் கள்வன்

பூந்தானம் எளிய கிராமத்து மனிதர். அதிகப் படிப்பறிவில்லாதவர். ஆனால், குருவாயூரப்பனோ அவரது உயிர். எளிய நடையில் உயர்ந்த தத்துவக் கருத்துகளை உள்ளடக்கி அவர் எழுதிய ஞானப்பான பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும்புகழ் பெற்றிருந்தன.
ஒவ்வொரு திங்கட் கிழமை அன்றும் குருவாயூர் சென்று பக்திப்பரவசத்தோடு, குருவாயூரப்பனை துதிப்பது அவர் வழக்கம்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை, அங்காடிபுரம் என்ற தன் கிராமத்திலிருந்து புறப்பட்ட போது, சற்று நேரமாகிவிட்டது. இருள் சூழத் தொடங்கிவிட்டது. காட்டு வழி. என்றாலும் அடிக்கடிப் போகிற பாதைதானே! குருவாயூரப்பன் துணையிருப்பான். மனத்திற்குள் கிருஷ்ண நாமத்தை ஜபித்தவாறு காட்டு வழியில் நடந்து கொண்டிருந்தார். யாருமற்ற தனிமை அவரைக் கொஞ்சம்
அச்சுறுத்தியது.
அப்போதுதான் எதிர்பாராத அந்த விபரீதம் நேர்ந்தது. சில கள்வர்கள் கையில் வேலோடு ஓடிவந்து அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். அவரிடம் எந்த விளக்கத்தையும் அவர்கள் கேட்கத் தயாராய் இல்லை. ஒரு மரத்தில் அவரைக் கட்டினார்கள். குருவாயூரப்பனே யசோதையால் உரலில் கட்டுண்டவன் தானே என்று அவர் நினைத்துக் கொண்டார். அவரிடம் என்ன பொருள் இருக்கிறது என்று ஆராயலானார்கள்.
பூந்தானம் பொருள் பறிபோவதைப் பற்றிக் கவலைப்படுபவர் அல்ல. செல்வத்திற்கெல்லாம் மேலான செல்வமான குருவாயூரப்பன் அருள் போதும் என்று வாழ்பவர் அவர். ஆனாலும், அவர் கைவிரலில் ஓர் அழகிய தங்க மோதிரம் இருந்தது. அதை மட்டும் கள்வர்கள் எடுத்துக் கொண்டுவிடக் கூடாது என்று பதட்டத்தோடு பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.
அந்தத் தங்க மோதிரம் அவர் விரலுக்கு வந்தது ஒரு தனிக்கதை. அது உண்மையில் அவருடைய மோதிரமல்ல. நாராயணீயம் எழுதிய நாராயண பட்டத்திரியுடையது...!
கல்விமானான நாராயண பட்டத்திரிக்குப் பூந்தானம் என்றால் சற்று இளக்காரம் தான். ஒருமுறை பூந்தானம் பாடிய ஞானப்பான பாடல்களைக் கேட்டார் அவர். ""இலக்கணமே சரிவர அமையவில்லையே? படிப்பறிவில்லாத நீங்கள் ஏன் பாட்டெழுத வேண்டும்?'' என்று கேட்டு அவரைக் கிண்டல் செய்தார்.
பூந்தானத்திற்கு அளவற்ற வருத்தம். பட்டத்திரி தம் பாடல்களை அங்கீகரிக்கவில்லையே? அவரே அங்கீகரிக்காதபோது பகவான் அங்கீகரிப்பானா? ""ஹே குருவாயூரப்பா! பட்டத்திரி என் பாடல்களை ஏற்கும் வகையில் நீ ஏதேனும் அற்புதம் செய்யலாகாதா?'' என பூந்தானம் உருகிக் கரைந்தார்.
மறுநாள் நாராயண பட்டத்திரியின் வீட்டுக் கதவைத் தட்டினான் ஒரு வாலிபன். அழகிய தோற்றம். திருத்தமான உடையலங்காரம். பார்த்தாலே மெத்தப் படித்த இளைஞன் என்பது தெரிந்தது. ""உங்கள் நாராயணீயம் மிகச் சிறப்பான காவியம் என்று புகழ்ந்தார் பூந்தானம். அவர்மூலம் அதன் பெருமையறிந்து அதைக் கேட்க வந்திருக்கிறேன்!'' என்றான் அந்த இளைஞன்.
பட்டத்திரி மகிழ்ச்சியோடு இளைஞனை வீட்டுக்குள் அழைத்து அமர வைத்து, தம் நாராயணீயத்தைப் படிக்கலானார். அவர் படிக்கப் படிக்க இடையிடையே அந்த இளைஞன் குறுக்கிட்டுக் கொண்டே இருந்தான். பல்வேறு இடங்களில் இலக்கணப் பிசகு இருப்பதைச் சுட்டிக் காட்டினான். பட்டத்திரியின் உள்ளம் நடுங்கியது. விழிகளில் கண்ணீர் வழி<ந்தது. ""என் நூலில்
இத்தனை இலக்கணத் தவறுகளா? இதை எப்படித் தாம் இதுவரை கவனியாது போனோம்? இந்த இளைஞன் எப்படி எல்லாவற்றையும் உடனுக்குடன் கண்டுபிடிக்கிறான்?''
திடீரென அவருக்குச் சந்தேகம் தட்டியது. ""அடேய்! மாபெரும் புலவனான என் கவியில் குற்றம் காண்கிறாயே? யார் நீ?'' என்று அதட்டினார். அடுத்த கணம் அந்த இளைஞன் மறைந்தான். அவன் நின்ற இடத்தில் தலையில் மயில்பீலியோடும் கையில் புல்லாங்குழலோடும் சாட்சாத் குருவாயூரப்பன் காட்சி தந்தார். ""பட்டத்திரி! பூந்தானமும் நீரும் எனக்கு இரு கண்கள். பூந்தானத்தின் கவிதையில் இலக்கணம் சரிவர இல்லாமல் போகலாம். ஆனால் பூந்தானம் எழுதிய பாடல்களில் பக்தி ததும்புகிறது. பூந்தானத்தை மதிக்காதவர்களை நான் மதிக்கமாட்டேன்!'' என்று அறிவித்த குருவாயூரப்பன் கண்பார்வையிலிருந்து மறைந்துபோனார்.
திகைத்த பட்டத்திரி ஓடோடிச் சென்று பூந்தானத்தின் காலில் விழுந்தார். பக்தியால் விளைந்த பொறாமையும் தன்னகங்காரமும் தான், சக பக்திமானான அவரைத் தாம் மதியாது போனதற்குக் காரணங்கள் என்று சொல்லி மன்னிப்பு வேண்டினார். அவரால் அல்லவோ பட்டத்திரிக்கு குருவாயூரப்பன் தரிசனம் கிட்டியது? அதைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்த அவர், நட்பின் அடையாளமாகத் தன் விரலில் அணிந்திருந்த தங்க மோதிரத்தை பூந்தானத்தின் விரலில் அணிவித்தார்.
""எனக்கு மோதிரமெல்லாம் எதற்கு?'' என்று கேட்ட பூந்தானத்திடம், ""நாம் இருவரும் நண்பர்கள் என்பதை உலகம் அறிவதற்கு,'' என்று பதில் சொன்னார் பட்டத்திரி. அந்தத் தங்க மோதிரம் எப்போதும் அவர் விரலில் தங்கி இருக்க வேண்டும் என்றும் இனி அவர் எழுதும் பாடல்களை அந்த மோதிரம் அணிந்த கையால்தான் எழுத வேண்டும் என்றும், குருவாயூரப்பனே நேரில் வந்து கேட்டால் அன்றி அந்தத் தங்க மோதிரத்தை அவர் வேறு யாருக்கும் கொடுக்கலாகாது என்றும் சொல்லி பட்டத்திரி அவரைப் பெருமைப் படுத்தினார்.
இப்போது கள்வர்கள் பூந்தானத்தைக் கட்டிப் போட்டிருக்கிறார்கள். அவரிடம் இந்த மோதிரம் தவிர வேறு எதுவும் இல்லை.
ஆனால் பட்டத்ரி சொன்னாரே! குருவாயூரப்பனே நேரில் வந்து கேட்டால் அன்றி யாருக்கும் கொடுக்காதீர்கள் என்று அன்போடு பேசினாரே! இப்போது இந்தத் திருடர்கள் மோதிரத்தை எடுத்துக் கொண்டால் என்ன செய்வது? பட்டத்திரி எங்கே மோதிரம் என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? குருவாயூரப்பா. மோதிரத்தை எப்படியாவது காப்பாற்றிக் கொடு,'' பூந்தானம் மனமுருகி வேண்டினார்.
அடுத்த கணம் எதிர்பாராத விதமாக அங்கே அந்த ஊர் திவான் மாங்காட்டச்சன் குதிரை மேல் வந்தார். கள்வர்கள் அவரைக் கண்ட நிமிடமே ஓடி மறைந்துவிட்டார்கள். திவான் பூந்தானத்தை நன்கு அறிந்தவர். அவரது கட்டை உடனடியாக அவிழ்த்து விட்டார் அவர். பூந்தானத்தின் மனம் நெகிழ்ந்தது.
""நீங்கள் செய்த இந்த உபகாரத்திற்கு நான் என்ன பிரதிபலன் செய்யப் போகிறேன்?'' என்று கையை அசைத்தும் கைவிரலை அசைத்தும் பேசினார் அவர். அப்படிப் பேசும்போது அசைந்த விரலையே பார்த்தார் திவான்.
""என்ன மோதிரம் இது? அழகாக இருக்கிறதே? நான் செய்த உபகாரத்திற்கு நன்றியாக மோதிரத்தை எனக்குக் கொடுங்களேன்!'' என்றார் திவான். சொன்னது மட்டுமல்ல. உரிமையோடு அவர் விரலில் இருந்த மோதிரத்தைக் கழற்றித் தான் எடுத்துக் கொண்டு விடைபெற்றார்!
பூந்தானத்தின் விழிகளில் கண்ணீர் அரும்பியது. திருடர்களிடம் பறிகொடுத்து விடுவோமோ என்று அஞ்சிய மோதிரத்தை திவானிடம் பறிகொடுத்து விட்டோமே? பட்டத்திரி கேட்டால் என்ன சொல்வது? உள்ளுற வருந்தியவாறே குருவாயூர் வந்து சேர்ந்தார் பூந்தானம்.
அன்று அதிகாலை. குளத்தில் குளித்துவிட்டு திவானும் பட்டத்திரியும் படிகள் மேல் ஏறி வந்துகொண்டிருந்தார்கள். பூந்தானம் தயக்கத்தோடு அவர்களை நோக்கிச் சென்றார். பூந்தானம் எதிர்பார்த்தபடியே அவரது விரலைப் பார்த்தார் பட்டதிரி.
""நான் அணிவித்த மோதிரம் எங்கே?'' என்று பரபரப்போடு வினவினார். கண்ணீரோடு நடந்தவற்றைச் சொன்னார் பூந்தானம்.
அதைக் கேட்ட திவான் சீற்றமடைந்தார். ""நீங்கள் இட்டுக்கட்டிய கதையில் என்னை ஏன் தேவையில்லாமல் இழுக்கிறீர்கள்! நேற்று முழுவதும் நான் எங்கும் செல்லவில்லையே! இங்கேயே தானே இருந்தேன்,''என்றார் திவான்.
குழப்பத்தோடும் கண்ணீர் வழியும் கண்களோடும் பூந்தானம் நின்று கொண்டிருந்தபோது அவரை நோக்கி ஓடிவந்தார் கோயில் அர்ச்சகர். சடாரென நெடுஞ்சாண்கிடையாக பூந்தானத்தின் காலில் விழுந்தார்.
""பூந்தானம்! எப்பேர்ப்பட்ட பக்தர் நீங்கள்? குருவாயூரப்பன் என் கனவில் வந்து சொன்னார். நேற்று இரவு பூந்தானத்தைக்
கள்வர்களிடமிருந்து காப்பாற்ற திவான் வடிவில் சென்றேன். அவரது மோதிரத்தை விளையாட்டாகக் கேட்டுப் பெற்றேன். நீங்கள் அதிகாலையில் நிர்மால்ய பூஜை செய்யும்போது என் பாதங்களின் மேல் ஒரு மோதிரம் இருக்கும். அதை ஜாக்கிரதையாக எடுத்துப் போய் பூந்தானத்திடம் கொடுத்துவிடுங்கள்! அது அவருடையது. என் இன்னொரு பக்தரான பட்டத்திரி அவருக்குப் பரிசாய் அளித்த மோதிரம் அது! இப்படிச் சொல்லி விட்டு மறைந்தார் குருவாயூரப்பன். பூந்தானம். இந்தாருங்கள் உங்கள் மோதிரம்!'' அர்ச்சகர் பூந்தானத்தின் விரலில் மோதிரத்தை அணிவித்தபோது பட்டத்திரியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. ""தன் மோதிரத்தை அனுமன் மூலம் சீதைக்கு அனுப்பிய ராமனும் அவனே அல்லவா? இப்போது என் மோதிரத்தை அர்ச்சகர் மூலம் உங்களுக்கு அனுப்பிவிட்டான்!'' என்று சொல்லி பட்டத்திரி பூந்தானத்தை அணைத்துக் கொண்டார்.
தன் பக்தனைக் காப்பாற்றக் குருவாயூரப்பன், திவானான தனது வடிவத்தை எடுத்துக் கொண்டாரே என்ற எண்ணத்தில், திவானின் விழிகளில் பக்திக் கண்ணீர் பெருகியது.
- இன்னும் வருவான்

திருப்பூர் கிருஷ்ணன்

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X