எல்லாமே இங்கு ஏழு
ஜனவரி 20,2013,16:33  IST

ஏழு மலை, ஏழு கோட்டை, ஏழு மகா துவாரங்கள், ஏழு அடி உயர பெருமாள்...
இப்படி எல்லாமே ஏழு ஏழாக அமைந்திருப்பது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி வரதராஜப்பெருமாள்கோயிலில். தமிழக திருப்பதி என அழைக்கப்படும் இங்கு, தாயார் பெருந்தேவியுடன் செல்வவளம் தருபவராக அருளுகிறார் பெருமாள்.

தல வரலாறு:

ஒருமுறை பஞ்ச பாண்டவர்கள் துரியோதனனிடம் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்றனர். பல இடங்களுக்கு சென்று விட்டு சூளகிரி மலைப்பகுதிக்கு வந்தனர். அங்கு அர்ஜூனன் பெருமாளை பிரதிஷ்டை செய்தான். பஞ்சபாண்டவர் இங்கு வந்ததன் அடையாளமாக, இந்த மலையில் "ஐந்து குண்டு' என்ற ஐந்து குன்றுகள் உள்ளன. மேலும் இந்த மலை சூலம் போன்ற அமைப்பில் இருக்கும். இதனாலேயே இப்பகுதி சூலகிரி என அழைக்கப்பட்டு சூளகிரி என மருவிவிட்டது.

சிறப்பம்சம்:

மேற்குபார்த்த இந்த பெருமாள்கோயிலில் உத்ராயண காலத்தில் (தை-ஆனி) சூரியன் அஸ்தமனம் ஆகும் போது, சூரியனின் கதிர்கள் பெருமாளின் பாதத்தில் பட்டு அவரை வணங்குவதை தரிசிக்கலாம். இதனால் அஸ்தகிரி எனவும் இத்தலம் அழைக்கப்படுகிறது. இக்கோயிலை பல மன்னர்கள் பல காலங்களில் கட்டியிருக்கிறார்கள். அர்ஜூனனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமாளுக்கு சோழ மன்னர்கள் கருவறை கட்டியுள்ளார்கள். விஜயநகர சாம்ராஜ்யத்தை சேர்ந்த கிருஷ்ணதேவராயரால் முன்மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் பின் கர்நாடகத்தை ஆண்ட ஹோய்சாளர்கள், பாளையக்காரர்கள், விஜயநகர சிற்றரசர்கள் படிப்படியாக இந்த கோயிலை விரிவுபடுத்தி வழிபட்டு வந்துள்ளனர்.

வளரும் பெருமாள்:

சூளகிரி மலையின் உயரம் 3000 அடி. மலையின் துவக்கப்பகுதியிலேயே வரதராஜப்பெருமாள் கோயில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.கோயிலின் கருவறை மற்ற கோயில்களை விட உயரம் குறைவாக அமைக்கப்பட்டுள்ளது. பெருமாளும் ஆரம்பகாலத்தில் கர்ப்பகிரக நிலைவாசலுக்கு உள் அடங்கி இருந்ததாகவும், காலப்போக்கில் வளர்ந்து பாதி அளவு தெரியும் அளவிற்கு வளர்ந்திருப்பதாகவும் கூறுகிறார்கள். வளரும் வரதராஜப்பெருமாளை தரிசித்தால், செல்வம் உள்ளிட்ட எல்லா நலன்களும் வளரும் என்பது ஐதீகம். மேற்குபார்த்த வரதராஜப்பெருமாளை பார்த்தபடி, கிழக்குப்பார்த்து பெருந்தேவி மகாலட்சுமி தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறாள். அனுமன் பெருமாளின் காவலனாக மகாமண்டபத்தின் வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார்.

திருவிழா:

வைகுண்ட ஏகாதசி, மார்கழி தனுர்பூஜை காலங்களில் கருட சேவை நடக்கும். இந்தப் பகுதியிலேயே இங்கு தான் மிகப்பெரிய கருடாழ்வார் வாகனம் உள்ளது.

திறக்கும் நேரம்:

காலை 6- பகல் 12 , மாலை 4 -இரவு 8.

இருப்பிடம்:

ஓசூர்-சென்னை நெடுஞ்சாலையில் 20 கி.மீ., தூரத்தில் சூளகிரி.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X