கேளுங்க சொல்கிறோம்!
மார்ச் 18,2013,09:59  IST

* உறங்கும்முன் "ஸ்ரீராமஜெயம்' கூறிக் கொண்டே இருக்கலாமா?
டி.யஸ்வந்த்ராஜ், சிங்கப்பெருமாள்கோவில்

ஸ்ரீராமஜெயம் மந்திரத்தை ஆண் பெண் பேதமில்லாமல் யாரும் எப்போதும் ஜெபிக்கலாம். குறைந்தபட்சம் 108 என்றாலும், தூக்கம் வரும் வரை ஜெபிக்கலாம். ராம, ஆஞ்சநேயருடைய அருள் உங்களுக்குப் பரிபூரணமாகக் கிடைக்கும்.

* ருத்ராட்சம் என்பதன் பொருள் என்ன?
ஆர்.மனோஜ், புதுமாயாகுளம்

ருத்ரன்+ அக்ஷம் என்பதே ருத்ராட்சம். "சிவனின் கண்' என்று பொருள். சிவசின்னங்களில் ஒன்றாக திகழும் ருத்ராட்சத்தை அணிந்து கொண்டால் தீயசக்திகள் அணுகாது. இதை அணிந்து குளித்தால் கங்கையில் நீராடிய புண்ணியம் உண்டாகும். ருத்ராட்சம் அணிபவர்கள் மனத் தூய்மையோடு இருப்பது அவசியம்.

* கண்ணன் புல்லாங்குழல் வைத்தபடம் வீட்டில் வைத்தால் ஆகாது என்கிறார்களே. ஏன்?
பி.சின்னதுரை, விருதுநகர்

குழல் ஊதும் கிருஷ்ணனால் செல்வம் கரையும் என்று சொல்வதெல்லாம் அறியாமை. கண்ணன் குழல் ஊதி பிருந்தாவனத்தில் மேயும் பசுக்களை ஒன்று சேர்த்தார். லட்சுமியின் அம்சமான பசுக்களால் செல்வவளம் பெருகும். இதேபோல, லட்சுமி நரசிம்மர், நடராஜர், சிவலிங்கம், காளி போன்ற தெய்வங்களை வீட்டில் வழிபடுவதால் நன்மையே கிடைக்கும்.

* ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா?
எஸ்.சடையப்பன், காளனம்பட்டி

ஜாதகம் இருந்தால் பொருத்தம் பார்க்கவேண்டியது அவசியம். இல்லாதவர்கள் கோயிலில் திருவுளச்சீட்டு போட்டு தெய்வ சம்மதத்தோடு திருமணம் செய்யலாம். பெண், மாப்பிள்ளை குடும்பத்தினர் கோயிலுக்குச் சென்று, "உன்னை நம்பி இந்த திருமணம் நடக்கிறது' என்று மனப்பூர்வமாக வேண்டிக் கொண்டு திருமணத்தை நடத்தலாம். நலமே நடக்கும்.

** கடவுளுக்கும் திருஷ்டி கழிக்கிறார்களே. இது அவரது சக்தியைக் குறைத்து மதிப்பிடுவது போல இருக்கிறதே?
மல்லிகைமன்னன், மதுரை

தெய்வீகசக்தி, தீயசக்தி என இரண்டுமே உலகில் இருக்கின்றன. தெய்வமாக போற்றப்படும் சுவாமி விக்ரஹத்திற்கு "பிராண பிரதிஷ்டை' (சக்தியை அதிகரிப்பது) முறையாக ஜெபிக்கப்படும் மந்திர முயற்சியால் தான். உடலுக்கு உணவு போல சிலைகளுக்கு மந்திரங்கள் ஆற்றலைத் தருகின்றன. திருஷ்டி போன்ற தீயசக்திகளால் அவற்றுக்கு தீங்கு நேராதபடி காப்பதற்காக திருஷ்டி போக்குவது அவசியமாகிறது. முறையான மந்திரங்கள் சொல்லாத இடங்களில் தான் சிலை திருட்டு, சிதிலமாதல் போன்றவை நடக்கின்றன என்று கூட சொல்லலாம்.

* புனிதநதிகளில் நீராடும் போது எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?
எஸ்.ராஜம்மாள், திருப்பூர்

எண்ணெய் ஸ்நானம் செய்யும் வழக்கம் கிடையாது. தீபாவளியன்று மட்டும் "தைலே லக்ஷ்மி' என்று நல்லெண்ணெயில் லட்சுமி வாசம் செய்வதாகச் சொல்வர். அதனால், தீபாவளியன்று மட்டும் விதிவிலக்கு. மற்ற நாட்களில் நதிகளில் சாதாரணமாக குளித்தாலே போதும்.

*கோயில்களில் 108, 1008 சங்காபிஷேகம் செய்கிறார்களே ஏன்?
ராஜமுருகையன், புதுச்சேரி

மந்திரம், ஜபம், அர்ச்சனை போன்றவைகளை மட்டுமல்ல, பூஜை சார்ந்த முக்கிய பொருட்களையும் 108, 1008 என அமைப்பது சிறப்பு. இவற்றில் சங்கு தெய்வாம்சம் கொண்டது. செல்வவளத்தின் அடையாளம். ஒலியெழுப்பி உற்சாகம் தருவது என்பதால் சங்கால் அபிஷேகம் செய்கின்றனர்.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X