பிள்ளையின் வடிவிலே யார் வந்தது?
ஏப்ரல் 01,2013,13:57  IST

ரங்கா...ரங்கா..எங்கேயடா போனாய்?'' அம்மா அழைத்த அழைப்பு, அவளது பிள்ளை ரங்கநாதனின் காதில் விழவில்லை. ஏனென்றால், அவன் காவிரி ஆற்றில் இன்னும் குளித்துக் கொண்டல்லவா இருக்கிறான்! வீட்டுக்கும், அவன் குளிக்கிற இடத்துக்கும் தூரம் அதிகம்.
ஆனால், காவிரியையும் தாண்டி, ராஜகோபுரத்தையும் தாண்டி, கருடாழ்வார் சந்நிதியையும், திருமணத் தூணையும் தாண்டி சயனத்தில் இருந்த ரங்கநாதரின் காதில் அது விழுந்தது.
""ஐயோ! எனக்கு இப்படி ஒரு அம்மா இல்லையே! இருந்தால் என்னையும் இப்படி பெயர் சொல்லி அழைத்திருப்பாளே! இருந்தாலும் பரவாயில்லை. ரங்கா...ரங்கா என்று என் பெயரைச் சொல்லித்தானே அழைத்தாள்! அவள் மகன் போனால் என்ன! நான் போனால் என்ன!'' ரங்கநாதர் கிளம்பி விட்டார் அவள் இல்லம் நோக்கி!
அன்று காலையில், அந்தத்தாயின் மகன், ""அம்மா! இன்று புளிப்புக்கீரை சமைத்து வை,'' என்று சொல்லிவிட்டுப் போனான். எட்டு மணிக்கு போனவனை மதியம் ஒரு மணியாகியும் காணவில்லை. பிள்ளை, காவிரியில் குளிக்கப் போனானோ இல்லையோ! குளிப்பதில் லயித்துப் போனான் போலும்! ஆளைக் காணவில்லை.
இதைப் பயன்படுத்திக் கொண்டு, நிஜமான ரங்கன், அவள் பிள்ளையைப் போல் தோற்றம் கொண்டு வீட்டுக்கதவைத் தட்டினான். அம்மா திறந்தாள்.
""ஏண்டா..இவ்வளவு நேரம்,'' செல்லமாகக் கடிந்து கொண்டவள், குழந்தைக்கு சோறும், புளிப்புக்கீரையும் பரிமாறினாள்.
""அம்மா! நீயே பிசைந்து ஊட்டி விடேன்!''...பிள்ளை ஏக்கமாகக் கேட்டான்.
ஒருநாளும், தன் பிள்ளை இப்படி கேட்டதில்லையே!
அம்மா ஆனந்தமாக ஊட்டி விட்டாள். கொஞ்சம் தான் மிச்சம். மொத்தக் கீரையையும் அரங்கமாநகர் இறைவன் சாப்பிட்டு விட்டான். அம்மாவின் கண்ணே பட்டுவிட்டது.
""சரியம்மா! பாடசாலைக்கு நேரமாகி விட்டது, வருகிறேன்,'' ரங்கன் கிளம்பி விட்டான்.
சற்றுநேரம் கழித்து மீண்டும் படபடவென கதவைத் தட்டும் ஓசை. பிள்ளை ""அம்மா... பசிக்கிறது! சீக்கிரம் சாப்பாடு போடு!'' என்று வந்து நின்றான்.
""ஏனடா! இப்போ தானே சாப்பிட்டாய். அதற்குள் இன்னொரு தடவை கேட்கிறாயே!''
""என்னம்மா ஆச்சு உனக்கு! நான் இப்போ தானே குளிச்சிட்டே வரேன்,'' என்ற மகனை, தாய் ஆச்சரியமாகப் பார்த்தாள்.
"அப்படியானால் வந்தது யார்? சாப்பிட்டது யார்?'
அவள் குழப்பம் தீர்ந்தது. ரங்கநாதன், ஆதிசேஷனில் சயனித்த கோலத்தில், அவள் கண்முன் காட்சி தந்தான். அடுத்து, அவள் பிள்ளையாக மாறி தோற்றமளித்தான்.
""ரங்கா...நீயா இங்கு வந்து என் கையால் உணவருந்தினாய். நான் ஏதுமறியாதவள் ஆயிற்றே! வேதமும் மந்திரமும் தெரியாத அஞ்ஞானியாயிற்றே! என் பிள்ளைக்கு உன் பெயர் வைத்ததால், எனக்கு இப்படி ஒரு கொடுப்பினையா?''
அவள் பரவசத்தின் உச்சிக்கே போய்விட்டாள்.
இப்போதும், ரங்கநாதர் புளிப்புக்கீரை சாப்பிட, அந்தத்தாய் வசித்த ஜீயர்புரத்திற்கு எழுந்தருளுகிறார். அந்தக்கீரை பிரசாதமாகவும் தரப்படுகிறது.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X