தெய்வ வேடத்தில் பக்தர்கள்!
அக்டோபர் 01,2013,12:20  IST

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பக்தர்கள் தெய்வ வேடமிடுவதையே நேர்த்திக்கடனாக செய்கின்றனர்.
தல வரலாறு : மகிஷாசுரமர்த்தினியாக வந்த அம்பிகை மகிஷாசுரனை வதம் செய்தாள். அந்த அம்பிகை, குலசேகரப்பட்டினத்தில் சுயம்புவாக எழுந்தருளினாள். ஒருசமயத்தில் மயிலாடி சுப்பையா ஆசாரியின் கனவில் தோன்றிய அம்மன்,"" எனக்கு சிலை செய்து அதை குலசேகரப்பட்டினத்தில் இருந்து வரும் அர்ச்சகரிடம் கொடுத்துனுப்பு,'' என்று தெரிவித்தாள். அதே போல அர்ச்சகர் கனவிலும் தோன்றி, சிற்பி தரும் சிலையை பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டாள். அதன்படி சுவாமியும், அம்மனுமாக 1934ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சுவாமி ஞானமூர்த்தி என்றும், அம்மன் முத்தாரம்மன் என்றும் பெயர் பெற்றனர்.
அம்பாள் சிறப்பு: கடற்கரையிலுள்ள இக்கோயிலில் சுவாமியும் அம்மனும் ஒரே பீடத்தில் வடக்கு நோக்கி உள்ளனர். ஞானமூர்த்தி இடக்காலை மடக்கியும், வலக்கையில் செங்கோல் ஏந்தியும், இடக்கையில் விபூதி கொப்பரையுடனும் காட்சி தருகிறார்.
முத்தாரம்மன் வலக்காலை மடக்கி, கைகளில்உடுக்கை, திரிசூலம், நாகபாசம், விபூதி கொப்பரை வைத்திருக்கிறாள். வலதுகாலை மடக்கிய அம்பாள்களுக்கு சக்தி அதிகம். அம்மை வந்தால், "முத்துப் போட்டிருக்கு' என்று சொல்வது தென்மாவட்டங்களில் வழக்கம். அவ்வாறு முத்து போட்டவர்கள், அம்பாள் பீடத்தைச்சுற்றி நீரைத் தேக்கி வைப்பர். இதனால் முத்து (அம்மை) இறங்கி குணமாகும். முத்துக்களை ஆற்றுவதால் அம்பிகைக்கு முத்து + ஆற்று + அம்மன் = முத்தாற்றம்மன் எனப் பெயர் வந்தது. காலப்போக்கில் முத்தாரம்மன் ஆகி விட்டது. அம்மை நோய் கண்டவர்கள் இங்கு வழிபட உடனே குணமாகும். 41 நாட்கள் விரதமிருந்து அம்மனை வழிபட தீராதநோய், மனநிலை பாதிப்பு, சொத்து இழப்பு, வியாபார நஷ்டம், வழக்கு போன்ற துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு உண்டாகும்.
அம்மனே பிரதானம்: இங்கு சுவாமியின் ஆற்றலை, அம்மன் வாங்கிச் சிவமயமாக இருக்கிறாள். அம்மனின் ஆற்றலைச் சுவாமி வாங்கி சக்திமயமாக இருக்கிறார். எனினும், இங்கு அம்பாளுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சக்தி தலமாகிய மதுரைக்குரிய மந்திர, யந்திர, தந்திர முறைகள் இங்கும் பின்பற்றப்படுகிறது. தந்திரம் என்பது பூஜை முறை, மந்திரம் என்பது தேவியை துதிக்கும் தோத்திரம், யந்திரம் என்பது விக்ரகத்திற்கு கீழே வைக்கும் தகடு.
நவராத்திரி: புரட்டாசி பிரதமையில் நவராத்திரி விழா தொடங்கும். ஒன்பது நாளும் முத்தாரம்மன் ஒவ்வொரு கோலத்தில் வீதி எழுந்தருள்வது வழக்கம். விஜயதசமியன்று இரவு 12 மணிக்கு சிம்மவாகனத்தில் மகிஷாசுரமர்த்தினியாக எழுந்தருளி, மகிஷனை வதம் செய்வாள். அப்போது, தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் சிவன், காளி, விஷ்ணு என விரும்பிய கோலத்தில் வேடமிட்டு வலம் வருவர். இந்த நேர்த்திக்கடன் வேறெங்கும் இல்லாத ஒன்றாகும்.
இருப்பிடம்: திருச்செந்தூர்- கன்னியாகுமரி ரோட்டில் 12கி.மீ., தூத்துக்குடியிலிருந்து 60 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை6-11, மாலை 4- இரவு8.
போன்: 97874 43462.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X