உத்ர துவார பாலினி!
நவம்பர் 26,2013,16:37  IST

உலகாளும் நாயகியான அம்பிகை, பல திருநாமங்களைப் பெற்றிருக்கிறாள். காவல் தெய்வமான காளி அம்சத்தோடு, உத்ர துவார பாலினி என்னும் வடக்குவாசல் செல்வியம்மன், நீலகண்டேஸ்வரி என்னும் இருவித கோலங்களில் கடையநல்லூரில் அருள்பாலிக்கிறாள்.
தல வரலாறு: தேவர் தலைவனான இந்திரன், கவுதமரின் மனைவியான அகலிகை மீது ஆசை கொண்டான். ஒருநாள், நள்ளிரவில் சேவல்வடிவெடுத்து கூவினான். பொழுது புலர்ந்தது என எண்ணிய முனிவர், காலைநேர அனுஷ்டானத்திற்காக கிளம்பினார். இதைப் பயன்படுத்திக் கொண்ட இந்திரன், கவுதமரின் வடிவில் சென்று அகலிகையை ஏமாற்றினான். விஷயமறிந்த முனிவர், இந்திரன் உடம்பெங்கும் கண்ணாகும்படி சபித்தார். சாபம் தீர இந்திரன் யாத்திரை புறப்பட்டான். பூலோகத்தில் அர்ஜுனபுரி என்னும் (கடையநல்லூர்) தலத்தை அடைந்தான். அங்கு நீலமணிநாதர், அருணாசலேஸ்வரர் என்னும் இரு சிவ லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அப்பகுதியின் ஈசானபாகமான வடகிழக்கில் குளம் ஒன்றை வெட்டினான். நீலமணிநாதரின் வடபுறத்தில், அம்பாளை வடக்குவாசல் செல்வி என்னும் பெயரில் நிர்மாணித்து பூஜித்தான். இவர்களை வணங்கி சாப விமோசனம் பெற்றான்.
கோயில் அமைப்பு: வடக்குவாசல் செல்வியம்மன் பெயருக்கேற்றாற் போல் ஊரின் வடபுறத்தில், அமைந்துள்ளது. பத்ரகாளி அம்சத்தோடு செல்வியம்மனும், சக்தி அம்சத்தோடு நீலகண்டேஸ்வரி அம்மனும் வீற்றிருக்கின்றனர். செல்வியம்மனுக்கு
"உத்ரதுவார பாலினி' என்ற பெயரும் உண்டு. எதிரெதிர் சந்நிதிகளில் இரு அம்மன்களும் இருக்கின்றனர். செல்வியம்மன் அசுர சக்தியை அழித்து பக்தர்களைக் காக்கும் விதத்தில் வலக்கையில் திரிசூலம் ஏந்தியிருக்கிறாள். இடக்கரத்தில் விபூதி கொப்பரை உள்ளது. தீராத பழிபாவத்தில் இருந்து பக்தர்களைக் காப்பதில் நிகரற்றவளாகத் திகழ்கிறாள்.
சிறப்பம்சம்: அம்மனுக்கு தை மூன்றாம் செவ்வாயில் திருவிழா நடத்துவர். விழாவிற்கு முதல்நாள் லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும், குங்கும அபிஷேகமும் நடத்துவர். செவ்வாயன்று மதியம் வரை தொடர் அபிஷேகம் நடக்கும். இரவு 11 மணிக்கு செல்வி அம்மனுக்கு சந்தன அலங்காரம் செய்வர். அதன்பின், நள்ளிரவு 12மணிக்கு படையல் பூஜை நடக்கும். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் மாவிளக்கு, உருவம் செலுத்துவது போன்ற நேர்ச்சைகளைச் செலுத்துவர். இங்கு விரைவில் திருப்பணி தொடங்க உள்ளது. திருப்பணியில் பக்தர்கள் பங்கேற்கலாம்.
திறக்கும்நேரம்: காலை9- பகல்11.
இருப்பிடம்: மதுரையில் இருந்து 155 கி.மீ., புதுபஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில்.
போன்: 90958 78440, 98439 39715.

Advertisement
மேலும் ஆன்மிக கட்டுரைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X