காற்றும்! தண்ணீரும்!
பத்தாம் வகுப்பு படிக்கும் டேவிட், ஒருநாள் சோர்வுடன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தான். இதை கவனித்த அவனது அப்பா, ''ஏன் இப்படி இருக்க? ஏதாவது பிரச்னையா?'' எனக் கேட்டார். ''அப்பா... நான் அரையாண்டு தேர்வில் அறிவியல் பாடத்தில் பெயில் ஆயிட்டேன். அடுத்து வரும் தேர்வை நினைத்தால் பயமா இருக்கு'' என அழுதான். இப்போது இவனுக்கு தேவை தன்னம்பிக்கை என்பதை உணர்ந்தார் அப்பா. அவனை தோட்டத்திற்கு அழைத்துச் சென்று கையில் பலுானைக் கொடுத்தார். அதில் நீர் நிரப்பி அங்கிருந்த தொட்டியில் மிதக்க விடு என்றார். அப்படி செய்ததும் அது மூழ்கியது. மீண்டும் காற்று நிரம்பிய பலுானை கொடுத்து மிதக்க விடச் சொன்னார். அது நீரில் மூழ்கவில்லை. '' இப்போது புரிகிறதா டேவிட்... பலுான் ஒன்று தான் என்றாலும் அதில் நீரை நிரப்பினால் மூழ்குது. காற்றை நிரப்பினால் மிதக்குது. பலுான்தான் உன் மனம். அதில் எதை நிரப்புகிறாயோ அதற்கேற்பவே செயல்படுவாய். நம்பிக்கையை மனதில் நிரப்பு. தேர்வில் என்ன... வாழ்விலேயே வெற்றி பெறுவாய்'' எனச் சிரித்தார்.