உள்ளூர் செய்திகள்

குறையாக தெரியவில்லை

பள்ளி ஆசிரியை ஒருவரின் வலது முழங்கையில் இருந்து விரல்கள் வரை வெள்ளையும், கறுப்புமாக பார்ப்பதற்கு கை விகாரமாக இருந்தது. ஒருநாள் அவளின் மகள் நான்சி, '' அம்மா... நீ அழகான பெண். ஆனால் உனது கை விகாரமாக இருக்கிறதே ஏன்'' எனக் கேட்டாள். ''மதிப்பு என்பது ஒரு பொருளின் பயனைப் பொறுத்ததுதான்'' என்றாள். ''அம்மா... நீ சொல்வது புரியவில்லை'' என்றாள். ''நீ குழந்தையாக இருந்த போது நாம் குடிசையில் குடியிருந்தோம். ஒருமுறை நீ துாங்கிய சமயத்தில் நான் அருகிலுள்ள கடைக்குச் சென்றிருந்தேன். திடீரென கூரையில் தீப்பற்றியது. மக்கள் தெருவில் நின்றபடி 'குழந்தை, குழந்தை' என கத்தினார்களே தவிர, ஒருவரும் காப்பாற்ற வரவில்லை. விபரம் அறிந்து கடையில் இருந்து ஓடி வந்த நான் உயிரை பொருட்படுத்தாமல் வீட்டுக்குள் நுழைந்தேன். தொட்டிலில் கிடந்த உன்னை துாக்கிக் கொண்டு வெளியே வரும் போது கொள்ளி ஒன்று என் மீது விழுந்ததால் வலதுகை இப்படி ஆனது. இந்தக் கை தான் என் குழந்தையைக் காப்பாற்றியது என்ற நினைவால் இது குறையாகத் தெரியவில்லை'' என்றாள். அம்மா என அழுதபடி அணைத்துக் கொண்டாள் மகள்.