உள்ளூர் செய்திகள்

வாய்ப்பை தவறவிடாதீர்கள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முதிய பெண்மணி ஒருவர் மருத்துவமனையில் படுத்திருந்தார். அவர் சில நாள் கூட உயிரோடு இருக்கமாட்டார் என மருத்துவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நர்ஸ், ''அம்மா எழுந்திருங்க... வெளியே நின்றுகொண்டிருந்த உங்கள் மகனை அழைத்து வந்திருக்கிறேன்'' என்றார். மயக்க மருந்து கொடுத்திருந்ததால் கண்களை மெதுவாக திறந்த அவர், எதிரே மங்கலாக தெரிந்த உருவத்தை அழைத்தார். நடுங்கும் கைகளால் பாசத்தோடு அவன் கைகளைப் பற்றினார் அந்த பெண்மணி. பிறகு கண்களை மூடிக்கொண்டார். அன்று இரவு முழுக்க அவனுடைய கைகளைப் பிடித்தபடியே இருந்தார். காலையில் நர்ஸ் உள்ளே நுழைந்தபோதும், பெண்மணியின் கைகள் அவனது கையை இறுகப் பற்றியிருந்தது. நாடியை பிடித்து பார்த்ததில் அவர் இறந்து போயிருந்தார். ''சாரி தம்பி... உங்க அம்மாவின் மரணத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்'' என்றார் நர்ஸ். ''நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. அவர் என் அம்மா இல்லை'' என்றான். ''அப்படின்னா... முன்னேயே சொல்லியிருக்கலாமே'' எனச் சொன்னார். ''இல்ல சிஸ்டர். நான் பக்கத்து அறையில் உள்ள நண்பனை பார்த்துவிட்டு வெளியே வரும்போதுதான், நீங்க என்னை உள்ளே கூட்டிவந்தீங்க. இங்க வந்த பிறகுதான் தெரிஞ்சுது... இவர் தன் மகனுக்காக ரொம்பவும் ஏங்குகிறார் என்று... அதுமட்டும் இல்லை... உயிருக்கு போராடுகிற அந்த கடைசி நிமிஷத்துல, அவருக்கு எந்த அளவுக்கு மகனின் அருகாமை தேவைப்படுதுனு புரிஞ்சுது. அதான் அப்படியே உட்கார்ந்துட்டேன்'' என்றான். நர்சால் நம்ப முடியவில்லை. அவரது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது. பெற்றோர்கள் வயதான காலத்தில் எந்த அளவுக்கு நமது அன்பிற்காக ஏங்குகிறார்கள் என்பதை புரிந்து கொண்டீர்களா... அவர்கள் வயதாகும்போது குழந்தைகளாக மாறிவிடுவார்கள். இன்னொரு உண்மை என்னவென்றால்... கடைசிக்காலத்தில் அவர்கள் நம்மிடம் இருந்து கூடுதலாக அன்பை எதிர்பார்ப்பார்கள். அதை கொடுக்க வேண்டியது ஒவ்வொரு பிள்ளைகளின் கடமை. இது ஆண்டவர் அளிக்கும் இறுதி வாய்ப்பாகும். இதை தவறவிட வேண்டாம்.