வரம் தருபவர்
தடைகளை தகர்த்து வரம் தர காத்திருக்கிறார் புதுடில்லி அருகிலுள்ள நொய்டா வரசித்தி விநாயகர். செக்டர் 22 ஜி பிளாக்கில் உள்ள இக்கோயிலை வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் நிர்வகிக்கிறது. காமம், கவலை, கோபத்தால் மனித மனம் அலை பாய்கிறது. 'அது எப்படியாகுமோ? இது எப்படியாகுமோ?” என்ற வருத்தம் அடிக்கடி வருகிறது. குழந்தைப் பருவம் முடிந்து வளர வளர இந்த குணம் அதிகரிக்கிறது. ஆனால் குழந்தையிடம் சோர்வோ, மனச்சுமையோ ஏதுமில்லை. அடம் பிடித்தாலும் சற்று நேரத்தில் மறந்து விட்டு மற்ற குழந்தைகளுடன் விளையாடுகிறது. இந்த சிறுகுழந்தைகள் வழிபடும் குழந்தை சுவாமியாக விநாயகர் இருக்கிறார். கனமான யானை வடிவில் இருந்தாலும், மூஞ்சூறு சுமக்கும் விதத்தில் பரம லேசான மூர்த்தியாகவும் இருக்கிறார். அவரது யானை முகத்தை பார்த்தாலே பரவசம் உண்டாகும். அந்த விநாயகராக இங்கு மூலவராக அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். தடைகள் விலக சங்கடஹர சதுர்த்தியன்று சிதறு தேங்காய் உடைக்கின்றனர். இதற்கான புராண காரணம் இதோ... ஒருமுறை சிவனிடம், ''உங்கள் தலையை எனக்குப் பலி கொடுங்கள்'' எனக் கேட்டார் விநாயகர். இதற்காக மூன்று கண்கள் கொண்ட தேங்காயை உண்டாக்கி சிதறுகாயாக அர்ப்பணித்தார் சிவன். ஆணவம் என்னும் ஓட்டை உடைத்தால் அருள் என்னும் இளநீர் வெளிப்படும் என்பதே இதன் தத்துவம். எனவே விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்தால் பிரச்னை தவிடு பொடியாகி விடும். இக்கோயிலின் கும்பாபிஷேகம் ஆக.29, 2022ல் நடந்தது. துர்கை, நவக்கிரக சன்னதியும் இங்குள்ளன. எப்படி செல்வது:டில்லி விமான நிலையத்தில் இருந்து 30 கி.மீ., டில்லி ரயில் நிலையத்தில் இருந்து 20 கி.மீ., விசேஷ நாள்: சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி.நேரம்: காலை 7:00 - 11:00 மணி; மாலை 5:30 - 8:00 மணிதொடர்புக்கு: 98111 79961, 98114 23705அருகிலுள்ள கோயில்: நொய்டா கார்த்திகேயர் (லாபம் பெருக...)நேரம்: காலை 7:00 - 11:00 மணி; மாலை 5:30 - 8:30 மணிதொடர்புக்கு: 98219 60888