உள்ளூர் செய்திகள்

இனிய உடல்நிலை தரும் ஈங்கோய்மலை ஈஸ்வரர்

உடல்நிலை சரியாக வேண்டுவோர், மாசி மகத்தை ஒட்டி, திருச்சி மாவட்டம் ஈங்கோய்மலை மரகதாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று வரலாம்.தல வரலாறு: பிருகு முனிவர் சிவனை வழிபடும் வழக்கம் உடையவர். அம்பாளை வணங்க மாட்டார். சக்தியும், சிவமும் ஒன்றே. பக்தர்களின் வழிபாட்டில் அம்பாளுக்கும் முக்கியத்துவம் வேண்டும் எனக்கருதிய சிவன், அவளுக்கு கோபம் வரும்படி நடந்து கொண்டார். இந்த விளையாடலுக்கு கட்டுப்பட்ட அம்பாள், பூலோகம் வந்து இத்தலத்தில் தவம் செய்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தன் உடலின் இடப்பாகத்தை தருவதாக உறுதியளித்தார். அந்த இடத்திலேயே மரகதலிங்கமாக எழுந்தருளினார். தன் மனைவியை மரகதாம்பாள் என்ற பெயரில் எழுந்தருளச் செய்தார். மரகத அசலத்தில் (மலையில்) எழுந்தருளியவர் என்பதால், 'மரகதாசலேஸ்வரர்' என்று பெயர் பெற்றார். 'திரணத்ஜோதீஸ்வரர், ஈங்கோய்நாதர்' என்ற பெயர்களும் உண்டு.தல சிறப்பு: இத்தல இறைவன் மரகதத்தால் ஆனவர். மாசி சிவராத்திரியின் போது மூன்றுநாட்கள் சுவாமி மீது சூரியஒளி விழுகிறது. இந்நேரத்தில் லிங்கம் நிறம் மாறி காட்சியளிக்கும். தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 63 வது தலம். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சாயாசக்தி பீடம் ஆகும். 560 படிகள் ஏறி கோவிலை அடைய வேண்டும். இக்கோவிலுக்கு நேர்எதிரே காவிரியின் அக்கரையில், திருவாட்போக்கி சிவன்கோவில் உள்ளது. பிரகாரத்தில் வல்லப விநாயகர், மகாவிஷ்ணு ஆகியோரும் உள்ளனர். கோஷ்டத்தில் ஒரு தட்சிணாமூர்த்தி, விமானத்தில் வீணையுடன் கூடிய தட்சிணாமூர்த்தி, கால்களை மாற்றி அமர்ந்த தட்சிணாமூர்த்தி என குரு பகவானின் வித்தியாசமான வடிவங்களை இங்கு காணலாம். சக்தி மலை: அம்பாளுக்கு, சிவன் தன் இடப்பாகம் தர உறுதி தந்த மலை என்பதால், இம்மலையை 'சக்திமலை' என்கின்றனர். இதனை உணர்த்தும் விதமாக முன்மண்டபத்திலும், மலையிலும் அர்த்தநாரீஸ்வரர் வடிவங்கள் உள்ளன. மரகதாம்பிகை, நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளது கருவறை விமானம், கோபுரம் போன்ற அமைப்பில் மூன்று கலசங்களுடன் இருக்கிறது.இரண்டு துர்க்கை: கருவறை கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) மகிஷாசுரனை வதம் செய்த துர்க்கை காலுக்கு கீழே மகிஷனுடனும், மற்றொரு துர்க்கை சாந்தசொரூபியாகவும் உள்ளனர். அடிக்கிற கை தான் அணைக்கும் என்ற பழமொழிக்கேற்ப காட்சி இது. ஒரே இடத்தில் துர்க்கையின் இரண்டு வடிவங்களை காணலாம்.ஊர் பெயர் விளக்கம்: சிவனின் திருமணத்தின் போது, உலகை சமப்படுத்த தென்திசை வந்த அகத்தியர், சிவனை வழிபட இங்கு வந்தார். அப்போது நடை அடைக்கப்பட்டு விட்டது. தனக்கு காட்சி தரும்படி சிவனை வேண்டினார். மலை அடிவாரத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி விட்டு வந்தால் தன்னை வணங்கலாம் என்று அசரீரி சொன்னது. அதன்படி அகத்தியர் தீர்த்தத்தில் நீராடியதும், ஈயாக மாறி விட்டார். பின் சன்னிதி கதவின் துவாரம் வழியாக உள்ளே புகுந்து சுவாமியை தரிசனம் செய்தார். வெளியே வந்ததும் மீண்டும் பழைய வடிவம் பெற்றார். அகத்தியர் ஈ வடிவில் வழிபட்ட தலம் என்பதால், ''திருஈங்கோய்மலை' என்றும், சிவனுக்கு ''ஈங்கோய்நாதர்' என்றும் பெயர் உண்டு.புளியமரத்தில் ஒளிந்த சிவன்: சிவனின் நண்பரான சுந்தரர், தான் விரும்பிய நேரங்களில் சிவனிடம் பொன் கேட்டுப் பெற்றுக் கொள்வார். அவர் இத்தலத்திற்கு வந்து சிவனிடம் பொன் வேண்டும் என கேட்டார். சுந்தரரிடம் விளையாட வேண்டும் என நினைத்த சிவன், இங்கிருந்த ஒரு புளியமரப் பொந்தில் ஒளிந்து கொண்டார். சுந்தரர், சிவனை எவ்வளவோ அழைத்தும் அவருக்கு காட்சி தரவில்லை. ஒரு தங்க புளியங்காயை மட்டும் அவருக்கு கிடைக்கும்படி செய்தார். சுந்தரர் அதனை எடுத்தபோது, புளியங்காய் மறைந்து விட்டது. தன்னிடம் சிவன் விளையாடுவதை உணர்ந்து கொண்ட சுந்தரர், கோபத்தில் ''எனக்கு கிடைக்காத புளி யாருக்கும் கிடைக்காமல் போகட்டும்,'' என சொல்லிவிட்டு திரும்பி விட்டார்.இத்தலத்தின் விருட்சம் புளியமரம். ஆனால், சுந்தரர் புளி யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று சபித்துவிட்டதால் அந்த புளியமரம் வாடி காலப்போக்கில் அழிந்து விட்டது. இத்தலம் பற்றி நக்கீரர், 'ஈங்கோய் எழுபது' என்ற பாமாலையை அருளியிருக்கிறார். சிவனுக்கு தீபாராதனை காட்டும்போது லிங்கத்தில் ஜோதி ஜொலிப்பதைக் காணலாம். பவுர்ணமி நாட்களில் சுவாமியும் அம்பாளும் கிரிவலம் செல்கின்றனர். மாசி மகத்தன்று விசேஷ பூஜை உண்டு. பவுர்ணமி நாளில் இங்கு வந்து வழிபடுவோருக்கு நீண்டநாள் நோய் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது.இருப்பிடம்: திருச்சியில் இருந்து 43 கி.மீ., தூரத்தில் முசிறி. இங்கிருந்து 7 கி.மீ., தூரத்தில் ஈங்கோய்மலை.நேரம்: காலை 9:00 - மாலை 6:00 மணிஅலை/தொலைபேசி: 94439 - 50031, 04326 - 262 744.