உள்ளூர் செய்திகள்

மனக் கதவைத் திற! மகிழ்ச்சி வரட்டும்!

* அன்பை வெளிப்படுத்தும் விதத்தில் மனக்கதவு எப்போதும் திறந்திருக்கட்டும். எண்ணம், சொல், செயல் மூன்றாலும் மகிழ்ச்சியை அது வரவழைக்கும்.* நேர்மையால் கிடைத்த வெற்றியைக் கொண்டாடுங்கள். கடவுளின் திருவடியில் வெற்றியைச் சமர்ப்பணம் செய்யுங்கள்.* மனிதன் எதை நினைக்கிறானோ அதுவாகவே ஆகிறான் என உபநிடதம் கூறுகிறது. சுதந்திரமாக வாழ்வதற்கும், அடிமைப்பட்டுக் கிடப்பதற்கும் மனதில் தோன்றும் எண்ணங்களே அடிப்படைக் காரணம்.* பெற்றோரும், உறவினர்களும் செய்யும் உதவியைக் காட்டிலும், மனமே மனிதனுக்கு அதிக உதவியைச் செய்யும். அதைக் கொண்டு எண்ணத்தை சீர்படுத்தி உயர்நிலை அடைபவனே புத்திசாலி.* மனம் தந்திர குணம் கொண்டது. நினைத்த உடனேயே எங்கு வேண்டுமானாலும் நம்மை இழுத்துச் செல்லும் சக்தி அதற்கு இருக்கிறது. எனவே, மனதை விழிப்புடன் கையாள வேண்டும்.* மனம் அலை பாயும் தன்மை கொண்டது. ஆனால், அதை கடவுளுடன் தொடர்புபடுத்தி விட்டால், எல்லையில்லாத மகிழச்சியைப் பெறலாம் என்று கீதையில் கிருஷ்ணர் குறிப்பிடுகிறார்.* எண்ணத்தைக் கட்டுப்படுத்தி, லட்சியத்தை நோக்கி செல்பவன் வாழ்வில் வளர்ச்சிஅடைகிறான். அதைக் கட்டுப்படுத்த தவறியவன் தாழ்ந்த நிலைக்கு ஆளாகி வீழ்கிறான்.* தியானமே எல்லா ஆற்றலுக்கும் மூலமாகத் திகழ்கிறது. மனதை உள்முகமாகத் திருப்பி, உயர்ந்த லட்சியத்தை நோக்கி செலுத்துவதே உண்மையான தியானம்.* வெளியுலகில் மனிதனுக்கு எத்தனை வசதி வாய்ப்புகள் கிடைத்தாலும், மன ஒருமைப்பாடு இல்லாவிட்டால் அந்த வாய்ப்புகளை நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியாது.* ஓய்வு பெறுவதற்காகத் தூங்கும் நிலையில், மனம் நாலாபுறமும் ஓடிக் கொண்டிருந்தால் மனிதனால் நிம்மதியாக தூங்கக் கூட முடியாது.* மனதின் இயல்பு என்பது நம்மால் ஏற்படுத்தப்பட்ட ஒரு பழக்கத்தின் விளைவே. பலவீனமான மனம் படைத்தவனும் முயற்சித்தால் மனதை சீர்படுத்த முடியும்.* 'நான் தூய்மையான மனம் படைத்தவன்', 'நான் கடவுளின் பிள்ளை' போன்ற நமக்கு தேவையான விஷயங்களை தொடர்ந்து நினைப்பதோ, சொல்வதோ விரைவில் பலனைக் கொடுக்கும்.* வாழ்வில் வெற்றி பெற்ற தருணங்களில், “எல்லாவற்றையும் எனக்கு அளித்த ஆதிசக்தியே! நான் என்னும் அகங்காரம் உண்டாகாமல் என்னைப் பாதுகாப்பாயாக” என்று வேண்டிக் கொள்ளுங்கள்.* ஆக்கப்பூர்வமான, உற்சாகம் தரும் நல்ல விஷயங்களை மட்டும் பேசுங்கள். இல்லாவிட்டால் எதையும் பேசவோ, கேட்கவோ செய்யாமல் மவுனத்தில் ஆழ்ந்திருங்கள்.* பிறர் உங்களை அவமதிக்கும் போது, அவர்களின் மூலம் பணிவு என்னும் பாடத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். பழிக்குப் பழிவாங்க வேண்டும் என சிந்திக்காதீர்கள்.* உண்மை என்னும் ஆயுதத்தை ஏந்திக் கொள்ளுங்கள். உண்மையே சிறந்த பாதுகாப்பு, அதுவே வெற்றிக்கான திறவுகோல். அதை விட ஆற்றல் மிக்க விஷயம் உலகில் வேறில்லை.சொல்கிறார் பரமானந்தர்