உலகின் முதல் நடராஜர்
UPDATED : ஜன 06, 2017 | ADDED : ஜன 06, 2017
ஜன.11 - ஆருத்ரா தரிசனம்உலகின் முதல் நடராஜர் சிலை திருநெல்வேலி அருகிலுள்ள செப்பறை நெல்லையப்பர் கோவிலில் உள்ளது.தல வரலாறு: தாமிரபரணியின் வடகரையில் ராஜவல்லிபுரத்தில் மன்னர் ராமபாண்டியனின் அரண்மனை இருந்தது. இவர் தினமும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று வழிபட்ட பிறகே சாப்பிடுவார்.ஒருமுறை தாமிரபரணியில் வெள்ளம் வந்துவிட்டதால் அவரால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. அன்று முழுவதும் ராமபாண்டியன் பட்டினியாக இருந்தார். அன்று மன்னர் கனவில் நெல்லையப்பர் தோன்றி, “இனிமேல் உன் மாளிகையின் அருகிலேயே நான் கோவில் கொள்ள முடிவு செய்துள்ளேன். சிதம்பரத்திலிருந்து ஒருவன் எனது நடனமாடும் வடிவுடைய விக்ரகத்துடன் வருவான். அந்த விக்ரகத்தை உன் மாளிகையின் அருகில் பிரதிஷ்டை செய்து கோவில் கட்டு. கோவில் கட்டுமிடத்தின் அருகிலுள்ள குழிக்குள் எறும்புகள் ஊர்ந்து செல்லும். அந்த இடத்தில் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்துவிடு,” என கூறி மறைந்தார். அதன்படியே நடக்க மன்னரும் இங்கு கோவில் எழுப்பினார். இங்குள்ள சிவனும் நெல்லையப்பர் என்றே அழைக்கப்படுகிறார். ராமபாண்டியன் கட்டிய கோவில் அழிந்த பிறகு, ஆரை அழகப்ப முதலியார் என்பவர் இப்போதுள்ள கோவிலைக் கட்டினார்.முதல் நடராஜர்: சிதம்பரம் நடராஜர் சிலையை சோழநாட்டு சிற்பியான நமச்சிவாயமுத்து ஸ்தபதி செய்தார். அவ்வூரை ஆண்ட சிங்கவர்மன் என்ற மன்னன் அச்சிலையைக் கண்டு வியப்படைந்தான். அது தாமிர (செம்பு) சிலையாக இருந்தது. இதே சிலையை தங்கத்தில் வடித்தால் மிகவும் சிறப்பாக இருக்குமே என எண்ணியவன், முதலில் செய்த சிலையை பிரதிஷ்டை செய்யாமல், தங்கத்தால் சிலை செய்ய உத்தரவிட்டான். ஆனால், அந்த சிலையும் தாமிரமாக மாறிவிட்டது. சிவன் அவன் கனவில் தோன்றி, “நான் உன் கண்ணுக்கு மட்டுமே தங்கமாக தெரிவேன். மற்றவர்கள் கண்ணுக்கு தாமிரமாகவே தெரிவேன். இதுவே என் விருப்பம்!” எனக்கூறி மறைந்தார். எனவே, இரண்டாவது செய்த சிலையையே சிங்கவர்மன் சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்தான். முதலில் செய்த சிலையை இறைவனின் கட்டளைப்படி சிற்பி ஒருவனிடம் கொடுத்துவிட்டான்.அவனது கனவில் தோன்றிய சிவன், “இந்தச் சிலையை சுமந்து கொண்டு தெற்கு நோக்கிச் செல்,” எனக்கூறி மறைந்தார். அந்த சிலையே இந்தக் கோவிலில் உள்ளது. இதன்படி முதன்முதலாக செய்யப்பட்ட நடராஜர் சிலை செப்பறைக்கு வந்து சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தான் தாமிரசபை இருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பிடம்: திருநெல்வேலி ஜங்ஷனில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் ராஜவல்லிபுரம். இங்கிருந்து 2 கி.மீ. தூரத்தில் செப்பறை.நேரம்: காலை 7:00 - 11:00, மாலை 5:00 - 7:00 மணி.