திருமூலஸ்தானம் கைலாசநாதர்
அகத்தியர் வணங்கிய காட்டுமன்னார்கோயில் திருமூலஸ்தானம் கைலாசநாதர் கோயிலுக்கு சென்று வருவோமா!தல வரலாறு: சிவபார்வதி திருமணம் காண உலக உயிர்கள் அனைத்தும் இமயத்தில் குவிந்தனர். இதனால் பூமி யின் வடபகுதி தாழ்ந்து தென்பகுதி உயர்ந்தது. இறைவன் குறுமுனிவரான அகத்தியரை அழைத்து, பூலோகத்தைசமநிலைப்படுத்த வேண்டினார். இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற பொதிகைக்கு அகத்தியர் சென்றார். வரும் வழியில் பல சிவலிங்கங்களை ஸ்தாபித்து வழிபட்டார். அவ்வாறு வழிபட்ட லிங்கமே திருமூலஸ்தானம் கைலாசநாதர். பிற்காலத்தில், இங்கு கோயில் எழுப்பப்பட்டது. சிவலிங்கத்தை அகத்தியர் வழிபடும் சன்னதி இங்கு உள்ளது.சிறப்பம்சம்: கி.பி., 710ல் 'நுசசோழன்' என்பவன் இக்கோயிலைக் கட்டினான். முற்கால சோழர்களின் கட்டடக் கலைக்கு சான்றாக உள்ளது. வழுவழுப்பான சிற்பங்கள் கண்ணைக் கவர்கின்றன. கைலாசநாதர் மீது சித்திரை முதல் வாரத்தில் சூரிய ஒளி விழுகிறது. செங்கல் கட்டுமானம்: பொதுவாக கல்தூண்களை பயன்படுத்தியே கோயில்களை கட்டியுள்ளனர். ஆனால், திருமூலஸ்தானத்தில் சற்று வித்தியாசமான முறையில், ஆஸ்தான மண்டபம் சிறிய அளவிலான செங்கற்களால் குகை வடிவில் கட்டப்பட்டுள்ளது. ஆர்ச் வடிவில் அமைக்கப்பட்ட கோயிலின் மேற்பகுதியிலுள்ள செங்கற்களில் காரை பெயர்ந்து கிடக்கிறது. சிற்பக்கலைக்கும், கட்டடக்கலைக்கும் எடுத்துக்காட்டான இந்த வித்தியாசமான கோயில் சிதிலமடைந்துள்ளதால் வழிபாடுகள் சரிவர நடக்கவில்லை. கல்வெட்டுகளும், வரலாறும்: கோயில் கருவறையின் வெளிப்புறச் சுவர்களை சுற்றி கிரந்த எழுத்துக்களால் ஆன கல்வெட்டுகள் உள்ளன. கோயில் பராமரிப்புக்காக பலராலும் பலகாலங்களில் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ள விபரம் இதில் காணப்படுகிறது. அகத்தியர் புடைப்புச்சிற்பம்: முப்பெரும் தேவியர்களான, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் உலக இன்னல்களைத் தீர்க்க இங்குள்ள கைலாசநாதரை வழிபட்டுள்ளனர். அகத்தியர் சிவனை வணங்குவது போன்றதொரு பெரிய புடைப்புச்சிற்பமும் காணப்படுகிறது. வெளிப்பிரகாரத்தில் அகத்தியர் சிவனை பூஜிப்பது போன்று உள்ள சந்நிதியில் தினமும் பூஜை நடந்து வருகிறது. கோயில் வளாகம் முழுவதும் பார்த்தீனியம் செடிகளும், முள்புதர்களுமாக காணப்படுகிறது. சுவாமி சிலைகளின் பீடங்கள், கல் தூண்கள், கோயில் மரக்கதவுகள், சுவர்கள் உட்பட அனைத்துப்பகுதிகளும் சேதமடைந்து காணப்படுகிறது. கொடிமரம், வாகன மண்டபங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் மட்டுமே காணப்படுகிறது. கலசங்கள் இல்லாமல் விமானங்களும் மொட்டையாக காணப்படுகிறது. ஊர் பொதுமக்கள் இணைந்து ஒரு கால பூஜை மட்டும் நடத்தி வருகின்றனர். இந்தக் கோயிலைப் புதுப்பிக்க தமிழக பக்தர்கள் முன்வந்தால் மிகப்பெரிய கலைக்கூடம் காப்பாற்றப்படும். திருவிழா: பிரதோஷம், சிவராத்திரி.திறக்கும் நேரம்: காலை 10- 11 மணி, மாலை 6-இரவு 7.30 மணி.இருப்பிடம்: சிதம்பரத்திலிருந்து 26 கி.மீ., தூரத்தில் காட்டுமன்னார்கோயில் உள்ளது. இங்கிருந்து இரண்டு கி.மீ., தூரத்தில் திருமூலஸ்தானம் உள்ளது. மினி பஸ் உண்டு.போன்: 04144 267 664