உள்ளூர் செய்திகள்

ஒருவருக்கு இரண்டு அம்மா இதெப்படி சாத்தியம் என்கிறீர்கள்?

 விநாயகருக்கு இரண்டு அம்மா... இதெப்படி சாத்தியம் என்கிறீர்களா!சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து புறப்பட்ட ஆறு தீப்பொறிகள் கங்கையில் மிதந்தன. அத்தீப்பொறிகளே ஆறு குழந்தைகளாக முருகப்பெருமானாக அவதரித்தன. இதனால், முருகனுக்கு கங்கையின் புதல்வன் என்ற பொருளில் 'காங்கேயன்' என்று பெயருண்டு. ஆனால், விநாயகருக்கு தம்பி முருகனைப் போல கங்கையுடன் நேரடி தொடர்பு இல்லாவிட்டாலும், அவரும் கங்கையைத் தன் தாயாக ஏற்றுக் கொண்டார். கங்கைக்கு 'தண்ணீர்' என்ற பொருள் உண்டு. தண்ணீரைக் கண்டதும் குதூகலம் கொள்வது யானையின் இயல்பு. அது துதிக்கையால் நீரை உறிஞ்சி பீய்ச்சாங்குழல் போல தன் உடம்பு முழுவதும் வாரி இறைத்து மகிழும். அதாவது விநாயகர் தன் இன்னொரு தாயான கங்கையுடன் (சிவனின் இன்னொரு மனைவி) விளையாடி மகிழ்கிறார் என்று பொருள் கொள்ளலாம். பார்வதி இவரை பெற்ற அன்னை. எனவே விநாயகருக்கு 'த்வைமாதுரர்' என்று பெயர் வந்தது. இதற்கு 'இரண்டு தாயார்க்காரர்' என்று பொருள்.