உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி /  மேகமலைப் பகுதியில் டூவீலர்களில் வலம் வரும் காதல் ஜோடிகள்: கண்காணிப்பு துவக்கம்

 மேகமலைப் பகுதியில் டூவீலர்களில் வலம் வரும் காதல் ஜோடிகள்: கண்காணிப்பு துவக்கம்

கம்பம்: மேகமலைப் பகுதியில் டூவீலர்களில் காதல் ஜோடிகளுக்கு கடிவாளம் போடும் நடவடிக்கைகளை வனத்துறையினர் துவக்கி உள்ளனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட சுற்றுலா தலங்களில் மேகமலை முக்கியமானதாகும். இங்குள்ள ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு , இரவங்கலாறு அணைகள் மிகவும் ரம்மியமாக இருக்கும். வாகனங்களில் சென்று கொண்டே அதன் அழகை ரசிக்கலாம். தேயிலை தோட்டங்களும், வன உயிரின நடமாட்டமும் சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தும். துாவானம் பகுதி, மகாராஜா மெட்டு பகுதிகளில் இருந்து பார்த்தால், கம்பம் பள்ளத்தாக்கை முழுமையாக பார்க்கலாம். எனவே தினமும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். சமீப காலமாக இளஞ்ஜோடிகள் குறிப்பாக காதல் ஜோடிகள் டூவீலர்களில் மலை ரோட்டில் அதிவேகமாக செல்கின்றனர். ஆபத்தை உணர மறுக்கின்றனர். ஆள் அரவமற்ற வனப் பகுதிக்குள் அமர்ந்து பேசுகின்றனர். மணிக்கணக்கில் நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்து அரட்டை அடிக்கின்றனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. செய்தியின் எதிரொலியாக சின்னமனுார் வனச்சரகர் திருமுருகன் தலைமையிலான வனத்துறையினர் காதல் ஜோடிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை துவக்கி உள்ளனர். ஹைவேவிஸ் மலை யடிவாரத்தில் உள்ள வனத்துறை சோதனை சாவடியில் டூவீலர்களில் வரும் இளம் ஜோடிகளிடம் முறையாக விசாரணை நடத்தி, அவர்களின் அடையாள அட்டைகளை சரி பார்த்து அனுப்பப்படுகின்றனர். குறிப்பாக அவர்களின் ஆதார் எண் பெறப்படுகிறது. அவர்களின் தந்தை அல்லது தாய் அலைபேசி எண்ணை பெற்று , அவர்களிடம் கேட்கப்படுகிறது. இந்த கிடுக்கிப்பிடி நடவடிக்கைளை பார்த்து சில ஜோடிகள் திரும்பி விடுகின்றனர். மேலும் மலை ரோட்டில் வனத்துறையினர் ரோந்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வனச்சரகர் திருமுருகன் கூறியதாவது: இளம் ஜோடிகளை கண்காணித்து வருகின்றோம். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன் தடுக்க வேண்டும் என்ற முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இப்பணிகள் நடக்கின்றன., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை