5 பேருக்கு மறுவாழ்வு தந்த 15 வயது சிறுவன்: இந்தாண்டில் 7 பேர் இறந்தும் வாழ்கின்றனர்
மதுரை: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஆனந்த போதி குமரன் 15, விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது உறுப்புகள் 5 பேருக்கு தானமாக வழங்கப்பட்டன. நிலக்கோட்டை பச்சைமலையான் கோட்டை கூத்தம்பட்டியைச் சேர்ந்த ஆனந்தபோதி குமரன் பிளஸ் 1 படித்தார். செப்.,10 இரவு 7:30 மணிக்கு வீட்டருகே டூவீலர் மோதியதில் தலையில் காயம்பட்டார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் செப்.,11 அதிகாலை 3:30 மணிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். நேற்று (செப்.,13) அதிகாலை 5:45 மணிக்கு மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மகனது உடல் உறுப்புகளை தானமாக தர ராஜேந்திரன் சம்மதித்தார். கல்லீரல், ஒரு சிறுநீரகம் திருச்சி காவேரி மருத்துவமனைக்கும் மற்றொரு சிறுநீரகம் மதுரை வேலம்மாள் மருத்துவமனைக்கும், இரண்டு கருவிழிகள் மதுரை அரசு மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. டீன் அருள் சுந்தரேஷ்குமார், ஆர்.எம்.ஓ., க்கள் சரவணன், முரளிதரன் தலைமையில் நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் சிறுவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்தாண்டு ஜனவரி முதல் தற்போது வரை மூளைச்சாவு அடைந்த 7 பேரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு 30க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. செப்.,ல் 2 பேரிடம் இருந்து உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.