| ADDED : டிச 07, 2025 05:38 AM
குடியாத்தம்: தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்ணிற்கு, 13 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்தார். வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த நாகாலை சேர்ந்தவர் மகாலிங்கம்; கார் ஓட்டுநர். இவரது மனைவி யசோதா. இவர் குடியாத்தம் அருகே தனியார் காலணி தொழிற்சாலையில், மாதம், 8,000 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்கிறார். சில நாட்களுக்கு முன், அவரது கணக்கில் சம்பள பணம் வரவு வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் பணம் எடுப்பதற்காக, அவரது கணவர் மகாலிங்கத்துடன் ஏ.டி.எம்., மையத்திற்கு சென்றார். அப்போது, 'போதிய இருப்பு இல்லை' என, பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து அவர்கள் கணக்கு வைத்துள்ள தனியார் வங்கியில் விளக்கம் கேட்டனர். அவர்கள் யசோதாவின் வங்கிக்கணக்கை ஆய்வு செய்து, அவர், 13 கோடி ரூபாய்க்கு ஜி.எஸ்.டி., வரி நிலுவை வைத்துள்ளதாகவும், அதனால் அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனால் தம்பதியினர் அதிர்ச்சி அடைந்த தம்பதியிடம், சென்னையில் உள்ள ஜி.எஸ்.டி., அலுவலகத்திற்கு செல்லுமாறு வங்கி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, மாத சம்பளத்தை எடுக்க முடியாமல் என்ன செய்வது என தெரியாமல் அந்த பெண் தவித்து வருகிறார்.