உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  செயலர், அமைச்சரையே மதிக்காத பெண் அதிகாரி!

 செயலர், அமைச்சரையே மதிக்காத பெண் அதிகாரி!

ஏ லக்காய் டீயை பருகியபடியே, ''போலீசாரே புலம்புறாங்க பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய். ''அவங்களுக்கு என்ன வே பிரச்னை...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி. ''சென்னை தாம்பரம் போலீஸ் கமிஷனரக கட்டுப்பாட்டில், மறைமலை நகர் போலீஸ் ஸ்டேஷன் வருது... பொதுவா, ஸ்டேஷனுக்கு புகார் அளிக்க போறவங்க, உள்ளூர் பிரமுகர்கள் யாரையாவது கூட அழைச்சிட்டு போறது வழக்கம் பா... ''அந்த வகையில், சிங்கபெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த ஒருத்தர் அடிக்கடி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து போனதுல, ஸ்டேஷன் அதிகாரிக்கு நெருக்கமாகிட்டார்... இப்ப, ஸ்டேஷன்ல அவர் வச்சது தான் சட்டம்னு ஆகிடுச்சு பா... ''ஒரு அதிகாரி பெயரை பயன்படுத்தி, போலீசாரையே மிரட்டி வேலை வாங்குறார்ன்னா பாருங்க... தன் பேச்சை கேட்காத போலீசார் பத்தி, அந்த அதிகாரியிடம் இல்லாததும், பொல்லாததுமா, 'போட்டு' குடுத்துடுறதால, போலீசார் எல்லாம் நொந்து போயிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய். ''பாலு, கோவிந்தராஜ் வர்றாங்க... சுக்கு காபி குடுங்க நாயரே...'' என்ற அந்தோணிசாமியே, ''ஜாதி அடிப்படையில் இட மாறுதல் லிஸ்ட் போட்டிருக்காங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார். ''எந்த துறையில ஓய்...'' என கேட்டார் குப்பண்ணா. ''கோவை மாவட்ட வருவாய் துறையில், சமீபத்துல நிறைய தாசில்தார்களுக்கு இட மாறுதல் போட்டாங்க... இதுல தகுதி, அனுபவம், ஒரே இடத்தில் இருந்தவங்கன்னு எதையும் பார்க்கலைங்க... ''நிறைய பேர் ஜாதி அடிப்படையில் தான் மாற்றப்பட்டிருக்காங்க... இதனால, 'அந்த இட மாறுதல்களை ரத்து பண்ணிட்டு, தகுதி, அனுபவம், பணிபுரிந்த வருஷங்களின் அடிப்படையில் புதுசா இட மாறுதல் போடணும்'னு, 10க்கும் மேற்பட்ட தாசில்தார்கள் போர்க்கொடி துாக்கியிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''அளவுக்கு மீறிய அதிகாரத்துடன் செயல்படுதாங்க வே...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அண்ணாச்சி. ''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய். ''தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி துறையில் ஒரு பெண் அதிகாரி இருக்காவ... இவங்க, உயர் கல்வி துறையின் செயலர் மற்றும் அமைச்சர் பேச்சை கூட கேட்கிறதே இல்ல வே... ''எதுக்கு எடுத்தாலும், 'நான் முதல்வரிடம் பேசிக்கிறேன்... துணை முதல்வர், தலைமை செயலரிடம் பேசிக்கிறேன்'னு முகத்துல அடிச்ச மாதிரி சொல்லிடுதாங்க வே... ''அண்ணா பல்கலைக் கழகத்துல நடந்த பேராசிரியர்கள் நியமனத்துல, அந்த பெண் அதிகாரியின் ஆதிக்கம் அதிகமாவே இருந்திருக்கு... இப்ப நடந்து முடிஞ்ச, பீஹார் சட்டசபை தேர்தல் பணிக்காக, தமிழகத்துல இருந்து போன ஐந்து அதிகாரிகள்ல பெண் அதிகாரியும் உண்டு வே... ''இதுல, நாலு அதிகாரிகளின் பொறுப்புகளை, மற்ற அதிகாரிகளிடம் கூடுதல் பொறுப்பா ஒப்படைச்சாவ... ஆனா, பெண் அதிகாரியின் பொறுப்பை மட்டும் யாருக்கும் தரல... ''பீஹார்ல இருந்தபடியே, தன் துறை பணிகளை, 'ஆன்லைன்'லயே அவங்க பார்த்துக்கிட்டதா சக அதிகாரிகள் சொல்லுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி. ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, ''சொல்லுங்க திவ்யா மேடம்... விஷயத்தை கேள்விப்பட் டேன்... இப்படியா, 'இன்னசென்டா' இருப்பேள்...'' என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை