உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  வாடிக்கையாளர்களின் சந்தோஷம் தான் பெரிது!

 வாடிக்கையாளர்களின் சந்தோஷம் தான் பெரிது!

திருமணங்களுக்கான ஒப்பனை தொழிலில் கலக்கும், திருப்பூரைச் சேர்ந்த சவுமியா: பி.காம்., - சி.ஏ., படிப்பதற்காக கல்லுாரியில் சேர்ந்தேன். கல்லுாரியில் படிக்கும்போது, ஒரு பெரிய கம்பெனியில் வேலைக்கு செல்ல வேண்டும் என்பது தான் என் கனவாக இருந்தது. ஆனால், அந்த நேரத்தில் கொரோனா ஊரடங்கு வந்து விட்டது. கொரோனா காலத்தில் படித்து தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு வேலை கொடுக்க பல நிறுவனங்கள் யோசித்தன. அதனால், வேறு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, 'நமக்கு தான் மருதாணி நன்கு போடத் தெரியுமே... அதனால், கூடுதலாக ஒப்பனை அலங்காரம் பயிற்சி படிப்பு படித்தால், நமக்கென ஒரு துறையை உருவாக்க முடியும்' என்று தோன்றியது. அதனால், ஆறு மாதங்கள் ஒப்பனைக்கான பயிற்சி வகுப்பில் படித்தேன். நான் நினைத்தது மாதிரி ஒப்பனை துறை அவ்வளவு எளிதல்ல. ஊரில் சின்ன சின்ன விழாக்கள் தான் நடக்கும். அதில் அதிக பணம் கிடைக்காது. ஆனால், பணம் குறித்து யோசிக்காமல், என் வேலையை நிறைவாக செய்தேன். அதனால், வாடிக்கையாளர்கள் திருப்தி அடைந்தனர். வாய் வழி விளம்பரங்கள் வாயிலாக, தொடர்ந்து வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. மேலும், நான் புதுப்புது பயிற்சிகளை கற்றுக் கொண்டேன். ஈரோடு, சேலம், கோவை என வெளியூர்களில் இருந்தும் ஒப்பனைக்கு அழைப்பர். எந்த வாய்ப்பையும் தவற விடாமல் பார்த்துக் கொள்கிறேன். நான் தொழில் ஆரம்பித்த இந்த நான்கு ஆண்டுகளில், எவரையும் போட்டியாக நினைக்கவில்லை; எனக்கான பாதையில் பயணிக்கிறேன். நிறைய தொடர் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்; நிறைய பிரபலங்களும் இருக்கின்றனர். அவர்களின் பாராட்டுகள் எனக்கு பெரிய ஊக்கமாக இருக்கின்றன. வெளியில் இருந்து வரும் வாய்ப்புகளே நிறைய இருப்பதால், தொடர்ந்து அதில் தான் கவனம் செலுத்தி வருகிறேன். எதிர்காலத்தில் அழகு நிலையம் வைக்கும் ஆசை இருக்கிறது. முகூர்த்த நாள் உள்ள மாதங்களில், மாதம் ஒன்றுக்கு, 60,000 ரூபாய்க்கு மேல் சம்பாதித்து வருகிறேன். வருமானத்தையும் தாண்டி, நான் ஒப்பனை செய்து முடித்ததும், வாடிக்கையாளர்கள் முகத்தில் பார்க்கும் சந்தோஷம் எனக்கு பெரிது. என்ன தான் போட்டிகள் இருந்தாலும், நமக்கு என்று தனித்துவத்தை வளர்த்துக் கொண்டால், எந்த இடத்திலும் நாம் தான் சாதனையாளர்கள்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ