உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  மீண்டும் அரங்கேறிய சிவசங்கரி நாடகம் குதுாகலத்துடன் கண்டுகளித்த ரசிகர்கள்

 மீண்டும் அரங்கேறிய சிவசங்கரி நாடகம் குதுாகலத்துடன் கண்டுகளித்த ரசிகர்கள்

சென்னை: எழுத்தாளர் சிவசங்கரி, கற்பனை, கர்மப் பலன், இளமை கால நினைவுகள், கணவன் - மனைவி சண்டை, மனமாற்றம், ஏமாற்றம் என, சுவாரசியமான மைய பொருளில் எழுதிய ஆறு சிறுகதைகளை வைத்து உருவான நாடகம், மயிலாப்பூர் ஆர்.ஆர்., சபாவில் நேற்று நிகழ்த்தப்பட்டது. கதை - கழுதை தேய்ந்து: செய்தித்தாளில் இடம் பெற்றிருந்த ஏழ்மை குடும்பத்திற்கு கணவருடன் சேர்ந்து உதவ நினைக்கும் மனைவி பூரணி. முதலில், 500 ரூபாய் தந்து உதவுவதாக கூறி இறுதியில் எதுவும் தராமல் ஒதுங்கி கொள்கிறார். தலைவர் வருகிறார்: டில்லியில் இருந்து சென்னை வரும் தலைவரின் வருகையையொட்டி, ஒரு நாள் கூத்திற்காக தரிசு நிலத்தில் சாலை போடுவது, 'ஹெலி பேட்' அமைப்பது என, தடபுடலாக ஏற்பாடு செய்கிறார் ஒரு அரசியல்வாதி. தலைவர் வராததால், செய்த ஏற்பாடு அவரது மனைவிக்கு பயனாகிறது ஆயா: கிராமத்தில் வாழும் ஆயா வடிவாம்பாள், மும்பையில் வசிக்கும் தன் மகன் மோகன் வீட்டிற்கு செல்கிறார். பாசத்தில் அழைத்ததாக எண்ணி பெருமை கொள்ளும் நிலையில், வீட்டு வேலைக்கு அழைத்ததை அறிந்து மனம் கலங்குகிறார். இதுபோல், ஆறு கதைகளை நாடகத்திற்கு ஏற்ப மாற்றி, தயாரித்து, இயக்கியுள்ளார் தாரிணி கோமல். இந்த நாடகம், கடந்த மாதம் 25ல், மயிலாப்பூர் நாரத கான சபாவில், அரங்கேற்றம் செய்யப்பட்டது. ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றதால், நேற்று மீண்டும் நிகழ்த்தப்பட்டது. நாஞ்சில் ரேவதி, சசிகுமார், அனுகண்ணன், தங்கப்பாண்டியன், விக்னேஷ் செல்லப்பன், காவ்யா உள்ளிட்ட நடிகர் - நடிகையர், பாத்திரத்தின் தன்மைக்கேற்ப நடிப்பில் அசத்தினர். 'கோமல் தியேட்டர்ஸ்' சார்பில், படைப்பாளிகளைப் போற்றுவோம் என்ற மைய பொருளில், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள், நாடக வடிவில் அரங்கேற்றப்படுகிறது. அவர்களின் இம்முயற்சிக்கு, ரசிகர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி