உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / குட்கா மாமூல் வசூலில் கோலோச்சும் போலீஸ் அதிகாரி!

குட்கா மாமூல் வசூலில் கோலோச்சும் போலீஸ் அதிகாரி!

பெ ஞ்சில் அமர்ந்த கையுடன், ''யாரும் பேசப்படாதுன்னு சொல்லிட்டார் ஓய்...'' என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா. ''என்ன விஷயம் பா...'' என கேட்டார், அன்வர்பாய். ''நடிகர் விஜயின், தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் கூட்டணி வைக்க, அ.தி.மு.க.,வினர் ஆசைப்படறால்லியோ... 'மாஜி' அமைச்சர் உதயகுமார், கூட்டணிக்கு வரும்படி விஜய்க்கு பகிரங்கமாவே அழைப்பு விடுத்தார் ஓய்... ''இதுக்கு ஏற்ப, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி பிரசாரக் கூட்டங்கள்ல, த.வெ.க., கொடியுடன் சிலர் கலந்துண்டா... 'இது கூட்டணிக்கான வெள்ளோட்டம்'னு பழனிசாமியே பேசினார் ஓய்... ''கூட்டணி சம்பந்தமா விஜய் தரப்புடன் அ.தி.மு.க.,வுல சிலர் ரகசிய பேச்சும் நடத்தினா... ஆனாலும், பேரத்துக்கு விஜய் கட்சியினர் படியல ஓய்... ''இதனால, வெறுத்து போன பழனிசாமி, 'இனி, விஜய் பத்தி யாரும் பேசப்படாது'ன்னு கட்சியினருக்கு கடிவாளம் போட்டிருக்கார்... அதே நேரம், 'அவரை விமர்சித்தும் பேச வேண்டாம்'னும் சொல்லிட்டார் ஓய்...'' என்றார், குப்பண்ணா. ''எதுக்கு தான் பணம் எடுக்குறாங்கன்னே தெரியலைங்க...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார் அந்தோணிசாமி. ''எந்த துறையில வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி. ''ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், கவர்னர், முதல்வர் உள்ளிட்ட வி.ஐ.பி.,க்கள் வர்றப்ப, உள்ளாட்சி அமைப்புகள் சார்புல அவசரமா ஏதாவது வேலைகள் செஞ்சா, 'கண்டிஜென்சி பில்' எனும் தற்செயல் செலவுன்னு கணக்கு எழுதி, தொகையை எடுத்து செலவு பண்றது வழக்கம்... ''ஆனா, கோவை மாநகராட்சியில், சமீபகாலமா வி.ஐ.பி.,க்கள் வராத சமயங்கள்ல கூட, எவ்வளவு பெரிய வேலையா இருந்தாலும், 'கண்டிஜென்சி பில்' போட்டு பணம் எடுக்கிறாங்க... இந்த வேலைகளுக்கு எந்த, 'டெண்டரும்' விடுறது இல்லைங்க... ''இது சம்பந்தமா, மாமன்றத்துக்கும் தகவல் தர்றது இல்ல... 'எதுக்காக இப்படி பணம் எடுக்கிறாங்க, எவ்வளவு தொகை எடுக்கிறாங்கன்னு மர்மமாவே இருக்கு'ன்னு அதிகாரிகள் மீது ஆளுங்கட்சி கவுன்சிலர்களே குற்றஞ்சாட்டுறாங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''பல கோடி ரூபாய்ல மாளிகை கட்டிட்டாரு வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்... ''பெரம்பலுார் மாவட்டத்துல, 'குட்கா' போதைப் பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ்ல ஒரு அதிகாரி இருக்காரு... இவர் தயவுல, மாவட்டம் முழுக்க, தங்கு தடையில்லாம, குட்கா விற்பனை சக்கை போடு போடுது வே... ''மாமூல் வாங்குறதை லட்சியமாவே வச்சிருக்கிற இவர், தன் சொந்த கிராமத்துல பல கோடி ரூபாய்ல பெரிய மாளிகையே கட்டிட்டாரு... தீபாவளி சமயத்துல, 'டாஸ்மாக்' பார்கள்ல தலா, 5,000 ரூபாய் வீதம் வசூல் பண்ணி யிருக்காரு வே... ''இப்படி வசூலுக்கு போயிருந்தப்ப இரூர் பார்ல இருந்த, 25,000 ரூபாயை இவர், 'ஆட்டை' போட்டுட்டதா உயர் அதிகாரிகளுக்கு புகார் போயிடுச்சு... இதனால, இவர் கூட வசூலுக்கு போன ஒரு எஸ்.ஐ., மற்றும் ஏட்டை ஆயுதப்படைக்கு துாக்கி அடிச்சிட்டாவ வே.. . ''ஆனா, மாவட்ட உயர் அதிகாரிக்கு மாமூல் வாங்கி தரும், 'கடமை'யை பண்றதால, இவர் மேல எந்த நடவடிக்கையும் எடுக்கல... இதனால, 'என்னை யாரும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது'ன்னு மார் தட்டிட்டு திரியுதாரு வே...'' என, முடித்தார் அண்ணாச்சி. ''ரமேஷ், இப்படி உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்து குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

duruvasar
நவ 07, 2025 10:08

சிறப்பு பிரிவு என்பதால் மிக சிறப்பாக செயல்படுகிறார் என எடுத்துக்கொள்ள வேண்டியதுதான் . மாண்புமிகு முதல்வரின் ஆக சிறந்த பன்ச் டயலாக்குகளை அதிகாரிகளும் உபயோகப்படுத்திக்கொள்கிறார்கள்


Krishna
நவ 07, 2025 08:41

Encounter All Money Hungry Corrupt-Looting Officials esp Police& Judges despite Receiving OverFattened Pay-Perks


புதிய வீடியோ