உள்ளூர் செய்திகள்

வலையில் ஒரு இதயம் (6)

முன்கதை: மனநலம் பாதிக்கப்பட்டிருந்த மாணவி ஸ்ருதி, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வீடு திரும்பியதும் கல்லுாரியில் சேர்ந்த போது ஏற்பட்ட அனுபவம் நிழலாடியது. அலைபேசிக்கு வந்த குறுஞ்செய்தி பற்றி எண்ணினாள். இனி -'யார்...' என்று மீண்டும் கேள்வி அனுப்பினாள்.'கண்டுபிடிக்க சொன்னேன்...' என்று பதில் வந்தது.அந்த, வாட்ஸ் ஆப் உரையாடலை தொடர வேண்டாம் என, அலைபேசியை வைத்து விட்டாள்.மறுநாள்-காலையிலேயே அந்த, 'மிஸ்டர் எக்ஸ்' எண்ணில் இருந்து, 'காலை வணக்கம்...' என, குறுஞ்செய்தி வந்திருந்தது; பதில் போடாமல் தவிர்த்தாள். வழக்கமான வகுப்புகள் ஆரம்பமாயின.தமிழகத்திலிருந்து வந்திருந்த நண்பர்களுடன் அறிமுகம் செய்தாள்.'நான், அரவிந்தன், அனிதா மற்றும் மகாலட்சுமி...' என்று, அவர்களும் அறிமுகப்படுத்தினர்.'தமிழ் எல்லாம் ஒன்னா சேர்ந்துட்டீங்க... பேசிட்டு இருங்க; என் நண்பர்களை பார்த்துட்டு வந்துடுறேன்...' என்று கிளம்பினாள் பூர்ணா.கேன்டீனுக்கு வந்தனர். எல்லாருடனும் செல்பி எடுத்து, அம்மாவுக்கு அனுப்பினாள் ஸ்ருதி.எதுவோ தாக்க, திடுக்கிட்டு எழுந்தாள் ஸ்ருதி; நினைவுகள் துண்டாயின.அம்மா தான், தலையணையால் அடித்திருந்தாள். ''வயசுப் புள்ள, படுத்து துாங்கற லட்சணத்த பாரு... ஒழுக்கம் வேண்டாம்...'' மருத்துவரிடம் போய் வந்த அசதியில், கட்டிலில் சரிந்து துாங்கியது புரிந்தது. ''ஏம்மா... வேணும்னே துாங்குவாங்களா... சோர்வா இருந்தது... அசந்துட்டேன்...'' எழுந்து உட்கார்ந்தாள் ஸ்ருதி. ''பாரு... மணி 9:00 ஆகுது; சாப்பிடாமல் இப்படி இருந்தா, போகிற இடத்தில், புருஷன் வீட்டுக்காரங்க என்னை தான் இகழ்வாங்க... எதிலும் ஒழுங்கு கிடையாது...''எரிச்சலடைந்த ஸ்ருதி, அம்மாவை முறைத்தாள். ''ஏன் இப்படி செய்ற... ஏதோ அசதியில தூங்கிட்டேன்; எழுப்பி விட்டு இருக்கலாம் தானே...'' என்றாள் ஸ்ருதி.''அசதின்னா குளிச்சிட்டு வந்து, சாப்பிட்டுட்டு படுத்திருக்கணும்...'' என்றாள் சுகந்தி.அம்மாவுக்கு பதில் சொல்லாமல், அமைதியாக இருந்தாள். ''இப்படித் தான, கல்லுாரி விடுதியிலயும் இருந்திருப்ப... அங்க கேட்கிறதற்கு ஆளில்லை. ஆனால், வீட்ல கேள்வி கேட்க ஆள் இருக்கோம்; ஒழுங்கை கடைப்பிடி; உன்ன பார்த்து, தம்பியும் கெட்டுப் போறான்...'' என்றாள் சுகந்தி.இந்த களேபரத்தை பார்த்த சூர்யா, ஏதோ முனங்குவது தெரிந்தது. நிறுத்தாமல் தொடர்ந்தாள் சுகந்தி...''உன் அத்தையோட குழந்தைகள பாரு... எப்படி ஒழுங்கா சொன்ன பேச்ச கேட்டு வளர்றாங்க...'''அத்தை உன்னை போலவா நடந்துக்கிறாங்க' என தொண்டை வரை வந்த கேள்வியை மறைத்தாள். சூழ்நிலையை சமாளிக்கும் விதமாக, ஆடையை சரி செய்து, கழிப்பறைக்குள் புகுந்தாள் ஸ்ருதி.இரண்டு நாட்கள் கடந்தன...அன்று மருத்துவர் அருணாவை, சுகந்தியும், ஸ்ருதியும் சந்தித்தனர்.சினேக புன்னகையுடன், ''சொல்லு ஸ்ருதி... கல்லுாரியில் ஆரம்ப நாட்கள் எப்படி இருந்துச்சு...'' என்றார் மருத்துவர் அருணா.''சேர்ந்த ரெண்டாவது நாளே, எனக்கு தமிழ் நண்பர்கள் கிடைச்சாங்க; என் விடுதி அறை தோழி பூர்ணா, மிகவும் கலகலப்பானவள்; கொஞ்சம் ஆடம்பர பிரியை...'' என்றாள் ஸ்ருதி.தலையசைத்து கேட்டார் அருணா.''வகுப்பில் முதல் இருக்கையில் அமர்வதை எதிர்பார்த்தேன்...''இடையில் குறுக்கிட்டு, ''பள்ளியில் படிக்கும் போது, எந்த ஒரு போட்டினாலும் தவறாம கலந்துப்பா...'' என, பெருமையாக கூறினாள் சுகந்தி.ஸ்ருதி முகத்தில் சங்கடம் நெளிந்தது.''ஆமா... சின்ன வயசிலிருந்து, முதல்ல வரணும்ன்னு ஊக்குவிப்பாங்க... வகுப்புல உட்காருறது கூட, முதல் பெஞ்சுல தான்...'' என பள்ளிப்பருவ அனுபவங்களை அசை போட்டாள் ஸ்ருதி.பின், ''கொஞ்சம் தனியாக பேசலாமா...'' என்றார் அருணா.புரிந்து கொண்ட சுகந்தி, ''வெளியில் காத்திருக்கிறேன்...'' என நகர்ந்தாள்.''சொல்லு ஸ்ருதி... உண்மையில், கல்லுாரியில் என்ன தான் நடக்கிறது...'' கேட்டார் அருணா. ''எதை பற்றி சொல்லணும்...''''முதல் மாணவியா எல்லாத்துலயும் வரணும்ன்னு நினைக்கிறல, அதை பத்தி சொல்லு...''நட்பு பொதிந்த குரலில் கேட்டார் அருணா.மனம் திறந்தாள் ஸ்ருதி.அரை மணி நேர உரையாடல் முடிந்தது. அடுத்து சுகந்தியை தனியாக அழைத்த அருணா, நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.''உங்க பொண்ணு, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறாள்; கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாயிடும்; இனிமேல் படிப்புல கவனம் செலுத்துவாள்...''''ஒழுங்கா படிக்கிறேன்னு ஒத்துகிட்டாளா...'' ''இது ஒத்துக்கிற விஷயமோ, உறுதி கொடுக்கிற விஷயமோ இல்ல... அவ உணர வேண்டிய விஷயம்; நீங்களும் ஒத்துழைச்சு போகணும்...'' ''அவளோட முன்னேற்றத்துக்காக எவ்வளவு பாடுபட்டிருக்கேன் தெரியுமா... ஒரு அம்மாவா பள்ளி படிப்பின் போது உதவி செஞ்சிருக்கேன்...''- தொடரும்...ரவி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !