உள்ளூர் செய்திகள்

மகிழ்ச்சி தரும் உதவி!

சென்னை, வேப்பேரி, திருவொற்றீஸ்வரர் இசை உயர்நிலை பள்ளியில், 1956ல், 11ம் வகுப்பு படித்தபோது, ஜார்ஜ் டவுன் பகுதியில் கட்டணமில்லாத மாணவர் விடுதியில் தங்கியிருந்தேன். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய தேதியை பள்ளியில் அறிவித்தனர். மயிலாப்பூரில் வசித்த என் தாத்தா, பணம் கட்டுவதாக கூறியிருந்தார்.கெடு விதித்திருந்த நாள் மதியம், 12:00 மணி வரை அவர் பள்ளிக்கு வரவில்லை. செய்வதறியாது கலங்கி நின்றேன். இதையறிந்த வரலாறு ஆசிரியர் சீனிவாசன், மதிய உணவுக்கு சென்ற மாணவர்களிடம், முடிந்த அளவு தொகை திரட்ட பணித்தார்.அவர்கள் எடுத்து வந்த தொகையுடன், கைப்பணத்தையும் போட்டு, என் தேர்வு கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்தி விட்டார்.என் தாத்தா, மாலை 4:00 மணிக்கு வந்தார்; நிகழ்ந்ததை அறிந்து நெகிழ்ந்தார். உதவியவர்களை பாராட்டி, அந்த தொகையை திருப்பிக் கொடுத்தார்.இப்போது என் வயது, 81; தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். அந்த சம்பவம் நினைவுக்கு வரும் போதெல்லாம் உள்ளம் உவகை கொள்கிறது.- ஜி.கோபால கிருஷ்ணன், சென்னை.தொடர்புக்கு: 99400 30212


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !