அதிமேதாவி அங்குராசு!
மெட்டல் டிடெக்டர்!தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கையில் இருக்கும் முக்கியமான கருவி, மெட்டல் டிடெக்டர். தமிழில் இதற்கு முறையான பெயரில்லை. மறைந்திருக்கும் வெடிகுண்டு போன்ற பயங்கர ஆயுதங்களை காட்டி எச்சரிக்கும் கருவி. ஆபத்து காலத்தில் காக்கும். உலோகத்தில் மின்சக்தி பாயும் போது, காந்த வளையம் உருவாகும். அதை ஆங்கிலத்தில், 'எலக்ட்ரோ மேக்னட்டிக் பீல்டு' என்பர். இதை அடிப்படையாக கொண்டு, மெட்டல் டிடெக்டர் கருவி செயல்படுகிறது.இந்த கருவியில், கம்பிச்சுருள்கள் வழியாக மின்சாரம் பாய்ச்சப்படும்; அதில் காந்த வளையம் உருவாகும். அருகில் வேறு உலோகம் இருந்தால், காந்த சக்தி காரணமாக, அதிலும் மின்சாரம் பாயும். அது மேலும் சிறிய காந்த வளையத்தை அந்த உலோகத்தில் ஏற்படுத்தும். இந்த காந்த வளையத்தை அறிந்து, 'பீப்' ஒலி எழுப்பி, மறைந்திருப்பதை காட்டும் மெட்டல் டிடக்டர் கருவி. இப்படித்தான், ஆயுதங்களையும், வெடி குண்டுகளையும் கண்டறிந்து காட்டுகிறது. தேவையைப்பொறுத்து, இந்த கருவி பல வடிவம், அளவுகளில் உருவாக்கப்படுகிறது. ரயில், விமான நிலைய நுழைவு வாசலில், நீண்ட செவ்வக வடிவில் காணப்படுவதும், மெட்டல் டிடெக்டர் கருவிதான். கையில் எடுத்து செல்லும் கருவிகளும் உண்டு. பூமியில் சுரங்க தாதுக்களை கண்டறியவும், மெட்டல் டிடெக்டர் கருவி பயன்படுகிறது. அதன் வடிவமைப்பு வேறு விதமாக இருக்கும்.பூமிக்குள் புதைந்துள்ள புராதன பொருட்களை கண்டறியவும், புதையலை அறியவும் பயன்படுகிறது. இந்த கருவி பயன்பாடு, அன்றாடம் அதிகரித்து வருகிறது.சார்ட்டர் விமானம்!சார்ட்டர் விமானத்தில் நோயாளிகளை அழைத்து வருவது குறித்து, செய்திகளில் படித்துள்ளோம். அதென்ன சார்ட்டர் விமானம். அது பற்றி அறிவோம்... திடீர் என ஓர் இடத்துக்குப்போக, ஆட்டோ, வாடகை காரை கூப்பிடுவோம். அதுபோல சொந்த தேவைக்கு, பிரத்யேக விமானத்தை அழைப்பதை, 'பிளைட் சார்ட்டர்' என்கின்றனர். வாடகைக்கு விமானத்தை பயன்படுத்துவது போன்றது. அந்த விமானம் எங்கிருந்து, எப்போது பறக்க வேண்டும்; எந்த வழியில் போக வேண்டும்; எந்த நிலையத்தில் இறங்க வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்கலாம். பயணியர் விமானத்தில், காத்திருந்து உரிய நேரத்தில் தான் பயணிக்க முடியும். சார்ட்டர் விமானத்தில் இதற்கு அவசியம் இல்லை. பாதுகாப்புப் பரிசோதனை முடிந்ததும், நேராக விமானம் அருகே சென்றுவிடலாம். காரில் செல்லக்கூட சில விமான நிலைய நிர்வாகங்கள் அனுமதிக்கின்றன. இதற்காக, தனி டெர்மினல் வசதி உண்டு. சற்று துாரமான இடத்தில் இந்த பயன்பாட்டுக்கான விமானங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். விமானத்தில் என்ன மாதிரி உணவு வசதி வேண்டும் என்பதையும் தீர்மானிக்கலாம். தனியாகவோ, குழுவாகவோ, சரக்கு கொண்டு போவதற்கோ, இதுபோல் விமானங்கள் வாடகைக்கு கிடைக்கின்றன. நிறைய வசதிகள் இருப்பதால், பிளைட் சார்ட்டர் செய்ய, பெரும் பணம் தேவைப்படும். - என்றென்றும் அன்புடன், அங்குராசு.