பட்ட பெயர்கள்!
பெற்றோர் வைத்த பெயர் ஒன்றாக இருக்கும். பள்ளியில், நண்பர்களிடம் பட்ட பெயர் என சிலருக்கு, ஏகப்பட்ட பெயர்கள் இருக்கும். இது போன்று, குறிப்பிட்ட நாடு, நகரங்களை பட்ட பெயரால் அழைக்கும் வழக்கம் உலகம் முழுதும் உள்ளது. புழக்கத்தில் உள்ள, சில பட்ட பெயர்களை பார்ப்போம்...மஞ்சள் நதி: ஆசியாவில் மூன்றாவது பெரியது மஞ்சள் நதி. இது அண்டை நாடான சீனாவில் ஓடுகிறது. இதை, 'சீனாவின் துயரம்' என்றும் அழைப்பர்; வெள்ள பெருக்கு காலத்தில் கரையை உடைத்து ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியபடி ஓடும். மக்களுக்கு சோகம் ஏற்படுத்துவதால், இந்த பெயர் நிலைத்து விட்டது.கடவுளின் இடம்: இமய மலைத்தொடரின் உச்சியில் அமைந்துள்ள நகரம் லாசா. இதை, 'கடவுளின் இடம்' என அழைப்பர்; இங்கு, பழமையான புத்த விகார்கள் உள்ளன. குளிர்காலத்தில் புத்த மத தலைவர், தலாய்லாமா இங்கு தங்குவார். புத்த துறவிகள் அதிகம் உள்ள பகுதி என்பதால், கடவுளின் இடம் என்றும், புத்த சொர்க்கம் என்றும் அழைக்கின்றனர்.வெள்ளை யானை பூமி: இந்திரனின் வாகனம் வெள்ளை யானை. இதை ஐராவதம் என்பர்; ஆசிய நாடான தாய்லாந்து, புத்த சமயத்தை பின்பற்றுகிறது. இந்து மதத்தின் தாக்கமும் உண்டு.புத்தர் பிறக்கும் முன், அவரது தாய் கனவில், ஒரு வெள்ளை யானை வந்தது. இதனால் புத்த சமயத்தவர், வெள்ளை யானையை வாழ்வின் முக்கிய அம்சமாக கருதுகின்றனர்.அதனால், புத்த விகார்களில், வெள்ளை வண்ணத்தில் யானையை நிறுவி வழிப் படுகின்றனர். இதை, தாய்லாந்து மக்கள், வளமை மற்றும் அறிவின் அடையாளமாக பூஜித்து வருகின்றனர். எனவே, தாய்லாந்து நாட்டை, வெள்ளை யானை பூமி என்பர்.அடிமைத்தனமற்ற நாடு: ஆசிய நாடான தாய்லாந்தை அந்த நாட்டு மக்கள், 'பிராதெட் தாய்' என அழைக்கின்றனர்; இதன் பொருள், 'அடிமைப் படாத நாடு' என்பதாகும். தென்கிழக்கு ஆசியாவில், ஐரோப்பியரின் ஆதிக்கத்துக்கு உட்படாத ஓரே நாடு தாய்லாந்து தான்.உலகின் கூரை: மத்திய ஆசியாவில் உள்ளது பாமிர் மலைத்தொடர்; செங்குத்தான உச்சியை மையமாக பெற்று இருபுறமும், 250 கி.மீ., துாரம் பரந்து விரிந்துள்ளது. இந்த பகுதியில் பனிபடர்ந்த கூரான உச்சி முனைகள், பனிக்கட்டி பாறைகள் சரிந்த நிலையில் தென்படும்.இமயமலையில், எவரெஸ்ட் சிகரம் அறியப்படும் முன், மத்திய ஆசியா பகுதியில் வாழ்ந்த மக்கள் இதை, உலகின் கூரை என அழைத்தனர்.ஹெர்மிட் கிங்டம்: யாருடனும் இணையாமல், தன்னிச்சையாக வாழ்பவரை, 'ஹெர்மிட்' என்பர்; கிழக்காசிய நாடான கொரியா, ஒரு காலத்தில், தன்னிச்சையாக இயங்கியது. பின், தென், வட என பிரிந்தது. தென் கொரியா, மேற்கத்திய கலாசாரத்துடன் இணைந்தது. வட கொரியா, இன்று வரை தனித்துவம் மிக்க நாடாக இயங்குவதால், இதை, 'ஹெர்மிட் கிங்டம்' என்ற பெயரில் அழைக்கின்றனர்.- ராஜி ராதா