தசரத சக்கரவர்த்தி!
ராமாயணக் காவிய கதாநாயகன் ராமரின் தந்தை தசரதர். இவர், 10 திசைகளிலும் ரதம் செலுத்தும் ஆற்றல் பெற்றிருந்தார். அதனால், 'தசம் ரதர்' என்ற பெயர் வந்தது.ஒரு நாள் -மன்னர் தசரதர், வேட்டையாடக் காட்டுக்குச் சென்றார். வேட்டையாடும் போது, குறி வைக்கும் மிருகம் மீது தான், அம்பு விடுவது வழக்கம். ஆனால், தசரருக்கு சப்தவேதி என்னும் வில் வித்தை தெரியும். அதன்படி, ஒலியை அனுமானித்து, இலக்கை தீர்மானித்து அம்பு விடுவார்; அது சரியாக இலக்கில் பாய்ந்து விடும்.அன்று, சரயு நதிக்கரையில் வில்லும், அம்புமாக நிற்கையில், ஒரு யானை, தண்ணீர் குடிப்பது போன்ற ஒலி கேட்டது. அதைக் கொண்டு அம்பை விட்டார்.தர்ம சாஸ்திரங்களின்படி, யுத்தம் தவிர, மற்ற நேரத்தில் யானைக்குப் பைத்தியம் பிடித்தாலொழிய அதைக் கொல்வது பாவம்.அம்பை விட்டது தான் தாமதம், 'அம்மா...' என கத்திய குரல் கேட்டது. திடுக்கிட்டார் தசரதர்; குரல் கேட்ட திசை நோக்கி விரைந்தார்.அங்கு, ஒரு முனி குமாரன் மீது அம்பு பாய்ந்திருந்தது. அவன், அலறிக்கொண்டிருப்பதைக் கண்டார். சிரவணகுமார் என்ற அந்த இளைஞன், பார்வையற்ற பெற்றோரிடம் மிகுந்த பக்தி பூண்டவன். பெற்றோர் தீர்த்த யாத்திரை போக விரும்பியதால், காவடியில் சுமந்து சென்று கொண்டிருந்தான். அவர்கள் தாகத்திற்கு தண்ணீர் கேட்டதால், காவடியை ஒரு மரத்தடியில் இறக்கி, குடத்தில் தண்ணீர் எடுக்க நதிக்கு வந்தான். தவறுதலாக அவனை அம்பால் வீழ்த்தி விட்டார் தசரதர். அதுகண்டு அடைந்த வருத்தம் கொஞ்ச நஞ்சமன்று. அவன் மார்பில் பாய்ந்திருந்த அம்பை லாவகமாக பிடுங்கி தேற்றப் பார்த்தார்.அந்த இளைஞன், அம்பு விட்டது யார் என்று தெரிந்ததும், 'என் உயிர் போவது திண்ணம். என் பெற்றோருக்கு குடிக்க தண்ணீர் எடுக்க வந்தேன்; இந்த குடத்தில் தண்ணீர் எடுத்து போய் கொடுங்கள்...' என உயிரைத் துறந்தான்.தசரதர் தண்ணீருடன் அவனது பெற்றோரிடம் சென்றார்.ஒரு வார்த்தையும் பேசாமல் தண்ணீரைக் கொடுத்தார். அதை வாங்கியபடி, தசரதரை தங்கள் மகன் என நினைத்து, 'ஏனப்பா இன்று நீ பேசவே இல்லை...' என்றனர்.வேறு வழியின்றி நடந்த விஷயத்தைக் கூறினார் தசரதர்.ஒரே மகனை இழந்த தம்பதியர் அழுது துடித்தனர். மகன் உடல் அருகே, அழைத்து செல்ல வேண்டினர்.அந்த இளைஞன் உடலுக்கு தசரதர் சிதை மூட்ட வேண்டி வந்தது. அவர் எவ்வளவோ அறிவுரைத்தும் கேட்காமல், அந்த தம்பதியர், மகனோடு உடன்கட்டை ஏறினர்.அதற்கு முன், தசரதருக்கு சாபம் கொடுத்தனர்.'மகனைப் பிரிந்து உயிர் துறப்பது போல், நீயும், உன் மகனைப் பிரிந்து உயிர் விடுவாய்' என்பதுதான் அந்த சாபம்.சாபம் கிடைத்தபோது, தசரதருக்கு பிள்ளை கிடையாது.பின், ராமனும், மற்றவர்களும் பிறந்தனர்.ராமன் காட்டுக்குப் போகிறானே என்ற துக்கத்தில் உயிரை விட்டார் தசரதர்.குழந்தைகளே... எத்தனை திறமை இருந்தாலும் கவனமாக இருங்கள்.