உள்ளூர் செய்திகள்

பெண் பேச்சு!

மந்தகாசம் நாடு புகழுடன் விளங்கியது. ராஜா மதிகேசவன் ஆட்சி செய்து வந்தார். சபையில் சிறந்த மந்திரி ஒருவரும் இருந்தார்.ஒரு நாள் -'ராஜா... திருமணம் செய்துக் கொள்ளுங்கள்; ராணி இருந்தால் தான், சகல காரியங்களையும், சரிவர செய்ய முடியும். அது உதவியாக இருக்கும்...' என்றார் மந்திரி.'திருமணமா... வேண்டவே வேண்டாம். அது பெரிய தொல்லை. கெட்டிக்காரனாகிய உன் துணையே போதும். முட்டாள்கள் தான், பெண்ணிடம் ஆலோசனைக் கேட்டு, சகல காரியங்களையும் செய்வர்...''மன்னிக்க வேண்டும்... நாட்டில் எல்லாருமே, மனைவி சொற்படிதான், காரியங்களை செய்கின்றனர் ராஜா...' 'அப்படியா மந்திரியாரே... பெண்களிடம் யோசனைக் கேட்பவர், முட்டாளாகத்தான் செயல்படுவர்...' என்று கடுமையாக கூறினார் ராஜா.ஆனாலும், மந்திரி சொன்ன அறிவுரை மனதில் கேள்வியாக நின்றிருந்தது. அன்றிரவு அது குறித்து சிந்தித்தார். பின், நாட்டில் ஆண்களை எல்லாம் சோதிக்கும் முடிவுக்கு வந்தார்.குறிப்பிட்ட தினத்தில், மணமான ஆண்களை, கொலு மண்டபத்திற்கு வரும்படி கட்டளையிட்டார். அதன்படி, பெருங்கூட்டமாக கூடியிருந்தனர் ஆண்கள்.அவர்களிடம், 'உங்களில் எத்தனை பேர், மனைவி பேச்சைக் கேட்டு அதன்படி நடக்கிறீர்கள்... அது போல் நடப்பவர்கள், என் வலப்புறம் வாருங்கள்...' என அழைத்தார்.கூட்டத்தில், ஒருவனைத் தவிர, அத்தனை பேரும், வலப்புறம் வந்தனர். தனியாக நின்றவனிடம், 'நீ தான் வீரன்; பெண் பேச்சைக் கேட்டு, கெட்டுப் போகாமல் இருக்கிறாய்... உனக்கு என் வாழ்த்துகள்...' என்றார்.எல்லாரும் ஒருமாதிரி விழித்தனர். தனியாக நின்றவன், 'மன்னிக்க வேண்டும் ராஜா... நான் சொல்லும் விஷயத்தை கவனியுங்கள். வீட்டை விட்டு நான் புறப்பட்ட போது, 'கூட்டத்தோடு சேர்ந்து நிற்காதே...' என, என் மனைவி சொல்லி அனுப்பினாள்... அதைத் தான் கடைபிடித்தேன்...' என்றான். விழி பிதுங்கி நின்றார் ராஜா.செல்லங்களே... ஆண், பெண் என்ற பேதம் கூடாது. யார் அறிவுரை கூறினாலும் சிந்தித்து தெளிந்து செயல்பட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !