உள்ளூர் செய்திகள்

இளஸ்.. மனஸ்! (97)

அன்பு பிளாரன்ஸ் ஆன்டிக்கு...என் வயது, 16; தனியார் பள்ளியில், 12ம் வகுப்பு படிக்கிறேன்; வீட்டின் மூத்த மகள் நான். 'அந்த இடத்தில் அப்படி பேசியிருந்தால், நன்றாக இருந்திருக்கும். ஆனால், நீங்கள் இப்படி பேசி விட்டீர்கள்... இது தவறு அம்மா...' என்று, சில சமயங்களில் என் அம்மாவுக்கு ஆலோசனை கூறுவேன்.'சின்ன பிள்ளை நீ எனக்கு ஆலோசனை கூறுகிறாயா... வயதுக்கு மீறி பேசுகிறாய்...' என கோபப்படுவார் அம்மா.இதனாலேயே தினமும் சண்டை தான். சிறு தவறு செய்தாலும், 'பிறருக்கு ஆலோசனை சொல்லும் உனக்கு, உன் வேலையை சரியாக பார்க்கவே தெரியவில்லை...' என சபிப்பார். அம்மாவுக்கு ஆலோசனை கூறுவது தவறா ஆன்டி... உரிய ஆலோசனை வழங்குங்கள்.அன்பு மகளுக்கு...உனக்கு, 16 வயதாவதாக எழுதியுள்ளாய். இது, சூதுவாதற்ற பருவம். பணம் சார்ந்த உலகத்தை பற்றி உனக்கு புரிதல் ஏற்பட்டு இருக்காது. அம்மாவுக்கு இருக்கும் உலக அனுபவத்தில், 10 சதவீதமாவது உனக்கு ஏற்பட்டு இருக்குமா... அறிவுரையும், ஆலோசனையும் கேட்க விரும்பாதவர்களுக்கு வலிந்து கூறுவது பயனற்றது. அதை மனதில் கொள்.ஒரு காரியத்தை செய்து கொண்டிருக்கும் போது, நான்கு பேர் முன்னிலையில் ஆலோசனை வழங்கினால், அம்மா கீழ்கண்டவாறு நினைக்க கூடும்.* நான்கு பேர் முன்னிலையில், மகள் அவமானப்படுத்துகிறாள்* மகளின் தவறுகளை சுட்டி காட்டுவதால் பழிக்கு பழி வாங்குகிறாள்* எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக கருதி அதிக பிரசங்கிதனம் செய்கிறாள்* ஆலோசனையை அடுத்தவர் முன் கூறுவது தவறு.அம்மாவுக்கு எதாவது ஆலோசனை கூற விரும்பினால், பொதுஇடத்தில் எதுவும் சொல்லாதே. தனியாக இருக்கும்போது, 'ஒரு ஆலோசனை கூற விரும்புகிறேன். சரியாக இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள்; தவறாக இருந்தால் விட்டு விடவும்...' என, இதமாக கூறு.'உன் ஆலோசனை வேண்டாம்; எனக்கு சமாளிக்கத் தெரியும்...' என பதில் கூறினால், மறு பேச்சு பேசாமல் விட்டு விடு.ஒருவேளை, 'சரி சொல்...' என கூறினால், கனிவான குரலில் இதமாக கூறு.நீ செய்வதைச் சுட்டிக் காட்டி, அம்மா ஆலோசனை கூறினால், தேவ வாக்காய் ஏற்று பின்பற்ற முயற்சி செய்.சரி... இந்த பகுதி உன் அம்மாவுக்கு...'எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு...' என்ற குறளை கேட்டதில்லையா...அம்மா பெரியவளா, மகள் பெரியவளா என்ற, 'ஈகோ' எதற்கு... மகள் சொல்லும் ஆலோசனை, ஆக்கப் பூர்வமாய் இருந்தால் எடுத்துக்கொள்ளவும்.இப்போதுள்ள குழந்தைகள், தொழில் நுட்பம் சார்ந்த அறிவுள்ளவர்கள்; அவர்களுக்கு தெரியாத விஷயங்களே இல்லை என்ற அளவில் உள்ளது; அவர்கள் சறுக்குவது, பண்பாடு, கலாசாரம் மற்றும் உறவுகளை பேணுவதில் தான்.இருவருக்கும் பொதுவான ஆலோசனை!மகன் - அம்மா உறவை விட, மகள் - அம்மா உறவே வீரியமானது. அம்மாவின் அருமை, மகளுக்கு திருமணமான பின் தான் முழுமையாக புரிகிறது. டீனேஜ் என்பது மிகவும் குழப்பமான வயது. உலகிலேயே புத்திசாலியாக நினைத்து பெருமைப்படும் அறியாமை, அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது. டீனேஜ் முடிந்ததும், அறிவு தெளிவு வந்து விடும்.மகளே... குறைகளை மறந்து, அம்மாவை நேசி; உனக்குள் ரோஜாதோட்டம் மலரும். தர்க்கம் இல்லாத, 'ஈகோ' இல்லாத, வயது வித்தியாசம் இல்லாத, வைரம் பதித்த பிளாட்டினமாக உலகத்தில் தாயுடன் பரமானந்தமாக வாழ வாழ்த்துகள்!- இனிய அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !