இளஸ் மனஸ்! (95)
அன்பு பிளாரன்ஸ்...என் வயது, 35; இல்லத்தரசியாக இருக்கிறேன். மகனுக்கு வயது, 14; வயதுக்கு மீறிய உயரம்; இரண்டு சக்கரம், நான்கு சக்கர வாகனங்களின் காதலன். கார் ரேஸ் சாம்பியன் மைக்கேல் சூமேக்கர் தான், அவன் ரோல் மாடல். என் கணவரின் வாகனங்களை எடுத்து, இரவு நேரம் பேய்த்தனமாய் ஓட்டுவான். போக்குவரத்து காவல் துறையினர், எங்கு நின்றிருந்தாலும், மோப்பம் பிடித்து, பிடியிலிருந்து தப்பி விடுகிறான்.சில நேரம், பைக்கில், என்னையும் அழைத்து செல்வான்; வெகு சீக்கிரமாய், அவன் கார் ரேஸ் சாம்பியனாக வழி வகை கூறவும்.அன்புள்ள அம்மா...எதிர்காலத்தில் மகன், கார் ரேஸ் சாம்பியனாக பிரகாசிப்பது இருக்கட்டும்; முதலில், அவன் சாலை விபத்தில் சிக்காமல் தப்பிக்க வைப்பது அதிமுக்கியம். அதை, கவனத்தில் கொள்ளவும்.இந்தியாவில், 2019ல், 4.3 லட்சம் சாலை விபத்துகள் நடந்திருக்கின்றன; அதில், 1 லட்சத்து 54 ஆயிரத்து 732 பேர் மரணமடைந்திருக்கின்றனர்; 4 லட்சத்து 39 ஆயிரத்து 262 பேர் காயம் பட்டிருக்கின்றனர்.தமிழகத்தில், சாலை விபத்துகளால் இறந்தோர் எண்ணிக்கை, 12 ஆயிரத்து 216. சாதாரணமாக, '50 சிசி' திறன் கொண்ட வாகனங்களை ஓட்ட, உரிமம் பெற வேண்டிய வயது, 16; இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்ட உரிமம் பெற வேண்டிய வயது, 18.மகன், 14 வயதில் மிதிவண்டி ஓட்டட்டுமே; எதற்கு கார் ஓட்டும் அவசரம். இரவில், அவன் வாகனங்கள் ஓட்டுவதையும், போக்குவரத்து காவலர் கண்களில் மண்ணைத் துாவி தப்பி வருவதையும் பெருமையாய் கூறுகிறீர்கள்.மைனர் வயதுள்ள மகன் வாகனங்களை ஓட்டுவது குற்றம் என்றால், வாகனங்களை ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் அதைவிட பெரும் குற்றவாளிகள்.மோட்டார் வாகன திருத்த சட்டம் - 2019 என்ன கூறுகிறது தெரியுமா...மைனர், வாகனங்களை ஓட்டினால், அது பறிமுதல் செய்யப்படும்; வாகனம் யார் பெயரில் உள்ளதோ அவரது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். வாகன உரிமையாளர் அல்லது மைனரின் பாதுகாவலர் அல்லது பெற்றோருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், மூன்று ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்; வாகனம் ஓட்டிய மைனர், சிறுவர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டப்படி தண்டிக்கப்படுவார்.பொதுவாக, இந்த சட்டத்தை போக்குவரத்து காவல் துறை அமல்படுத்துவதில்லை; மைனர்களை பிடித்ததும், பெற்றோரை வரவழைக்கின்றனர். பெற்றோரிடம் லஞ்சம் பெற்று, மைனரை காவல் நிலையத்தில் அரை மணி நேரம் பயமுறுத்தி விடுவிக்கின்றனர்.மகன் மைனர் என்பதால், இனியேனும் வாகனம் ஓட்டுவதை ஊக்குவிக்காதே... கறாரும் கண்டிப்புமாய் செயல்பட்டு, அவனை தடுத்து நிறுத்தவும்.இந்தியாவில், கார் ரேஸ் சாம்பியனாக உருவாக வாய்ப்புகள் குறைவு; எதுவாக இருந்தாலும், அவனுக்கு, 18 வயதாகட்டும். அதுவரை காத்திருக்கவும்.கார் ரேஸ்களில் கலந்து கொள்ள, சர்வதேச, 'கிரேட் ஏ போட்டி' உரிமம் இருக்க வேண்டும். பார்முலா இரண்டில் ஆறு ரேஸ்களில் கலந்திருக்க வேண்டும். 25 சூப்பர் லைசென்ஸ் பாயின்ட்கள் இருக்க வேண்டும்; அந்த பாயின்ட்களை கடந்த, மூன்று ஆண்டுகளில் பெற்றிருத்தல் நலம். எப்.ஐ.ஏ., தியரி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.நடிகர் அஜித் போன்றோரே, கார் ரேஸ் கனவுகளை சுருக்கித்தான் நடிகராயிருக்கின்றனர்.கார் ரேஸ் சாம்பியனாக, 18 முதல், 28 வயது வரை, ஆண்டு முழுக்க மெக்கோ அகாடமியில் கார் ஓட்டும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்; இந்த அகாடமி, ரேசில் கலந்துகொள்ளும் ஓட்டுனர்களுக்கு, 15 ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகிறது.உங்கள் மகனின் ரோல் மாடலாக உள்ள சூமேக்கர், கார் பந்தயத்தில் மரணக்காயம் பட்டுக்கிடக்க, அவரது மகன் மிக் சூமேக்கர் கார் ரேஸ்களில் கலந்து கொள்கிறார்; அவரது வயது, 21.கல்வி, வேலை, திருமணம் போன்றவற்றின் மீதான கனவுகளை உதறி, உங்கள் மகன் முழு நேர கார் ரேஸ் சாம்பியனாக செயல்பட வாழ்த்துகள். அந்த கனவுக்கு, 18 வயதுக்கு பின், தயாராக இருந்தால், அவன் முயற்சி வெற்றி பெறட்டும்.- அன்புடன், பிளாரன்ஸ்.