பாடம்!
கோபு தனிமை விரும்பி. யாருடனும் பேச மாட்டான். மற்ற மாணவர்கள், பாடங்களில் சந்தேகம் கேட்டால், சொல்லித்தர மாட்டான். கூடி விளையாட மாட்டான். அவனுடன் படித்தவன் ராமு. அவனுக்கு ஏகப்பட்ட நண்பர்கள். எல்லாருடனும் விளையாடுவான். கலகலப்பாக பேசுவான். எந்த உதவி கேட்டாலும் செய்வான். நண்பர்கள், ராமுவை கொண்டாடினர்.அதைப் பார்க்கும் போதெல்லாம், கோபுவுக்கு பொறாமை ஏற்பட்டது. மனதுக்குள் புழுங்கினான். ஒருமுறை கூட கோபுவை ஒதுக்கியதில்லை ராமு. மிகவும் அன்புடன் நடந்து கொள்வான்.பாடங்களை உரு போடுவதில் மன்னன் கோபு. திரும்ப திரும்ப படித்து மனப்பாடம் செய்துக் கொள்வான். என்ன பயன்... படிப்பில், ராமுவை முந்த முடியவில்லை.ஒருமுறை, 'கேட்டால் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டாயே ராமு...' என நாசுக்காக ஆரம்பித்தான் கோபு.'கேள்... தயங்காதே...''வகுப்பில் நன்றாக பாடத்தை கவனிக்கிறேன்; வீட்டில் பலமுறை மனப்பாடம் செய்கிறேன். ஆனாலும், என்னை விட அதிக மதிப்பெண் வாங்கி விடுகிறாயே...''நீயோ, பாடத்தை மனப்பாடம் செய்கிறாய்; நான் அப்படி செய்வதில்லை. இனிமையாக படிக்கிறேன். பாடத்தில் சந்தேகம் கேட்பவர்களுக்கு, சலிக்காமல் சொல்லிக் கொடுக்கிறேன். அதனால், மனப்பாடம் செய்வதை விட, ஆழப்பதிந்து விடுகின்றன பாடங்கள்...''நன்றி... இனி, யார் என்ன உதவி கேட்டாலும் செய்வேன்...' தீர்மானமாக கூறியபடி நடந்தான், கோபு. அவனுக்கும் நண்பர் கூட்டம் அதிகரித்தது.குழந்தைகளே... கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பாடத்தை கற்றுக் கொள்ளுங்கள்.அமுதகுமார்