புத்தாண்டு டைரி!
இன்றுடன், ஆறு நாட்கள் தான் இருக்கின்றன. புதிய ஆண்டு நம்பிக்கை ஊட்டும்; மன உறுதியை, மகிழ்ச்சியை அள்ளி தரும் என நம்புவோம்! புதிய டைரியில் அழகிய கையெழுத்தை பதிப்பது போல் பிறப்பது புத்தாண்டு. முன்பு, பலவகையில் கொண்டாண்டங்கள் இருக்கும். கால ஒட்டத்தில் பல காணாமல் போய்விட்டன.புத்தாண்டை சொல்லும், 'காலண்டர்' இன்றும் பயணத்தை தொடர்கிறது. கணக்கு கூட்டுவது என்ற பொருள் தரும், 'கலண்டே' என்பது லத்தீன் மொழி சொல். இந்த உச்சரிப்பில் உருவானதே, 'காலண்டர்' என்ற ஆங்கில சொல். அழகு தமிழில், 'நாட்காட்டி' என்கிறோம். காலண்டரை முதன்முதலில் பிரபலப்படுத்தியது எகிப்தியர் என வரலாறு கூறுகிறது. விவசாய பருவத்தை கணக்கிடவும், ஆற்றில் வெள்ளப் பெருக்கை அறியவும், காலண்டரை பயன்படுத்தினர். பல மாற்றங்களுடன் அது வளர்ந்து இன்றைய நிலையை அடைந்துள்ளது. தமிழகத்தில், காலண்டர் தயாரிப்பு தொழிலால் சிறப்பு பெற்றது சிவகாசி நகரம். தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் வரி விதிப்புகளால் இந்த தொழில் நசிந்து வருகிறது. நினைவுச் சின்னம்!லத்தீன் மொழியில் பிறந்தது, 'டைரி' என்ற சொல். அதற்கு, 'நாள்' என பொருள். நினைவுகளை செதுக்கி, பாதுகாக்க மனிதன் கண்டு பிடித்த ஆயுதமே, டைரி எழுதும் வழக்கம். அன்றாடம் செய்யும் நல்ல நிகழ்வு, செயல், அனுபவங்களை தாங்கிநிற்கும் வாழ்க்கை ஆவணம்.ஆங்கிலேயரான சாம்யல் பிப்ஸ், 17ம் நுாற்றாண்டில் எழுதிய டைரி குறிப்பு முக்கியத்துவம் பெற்றது. பின் தான் ஐரோப்பிய நாடுகளில், டைரி எழுதுவது வழக்கமானது.சாப்பாட்டு டைரி, அலுவலக டைரி, சம்பள டைரி, பயண டைரி, மருத்துவ டைரி, நடிகர்-, நடிகைகளின் கால்ஷீட் டைரி, தன்னிலை விளக்க டைரி, வீட்டு வரவு-செலவு டைரி, பள்ளி டைரி என பலவகை உண்டு. விரும்பியபடி அன்றாட நிகழ்வுகளை எழுதலாம். ரகசிய குறியீடு மூலம் எழுதுவதும் உண்டு. கட்டுரை, கதை, கவிதை வடிவிலும் எழுதலாம். புதுச்சேரியில், ஐரோப்பியரான பிரெஞ்சுக்காரர் ஆட்சியில் முக்கிய பொறுப்பு வகித்தவர் ஆனந்தரங்கம் பிள்ளை. அவர் தினமும் எழுதிய நாட்குறிப்பு வரலாற்று ஆவணமாக திகழ்கிறது.அறிவியல் தொழில்நுட்பம் தந்துள்ள கணினி, அலைபேசியை பயன்படுத்தியும், அன்றாடம் டைரி எழுதலாம். தினமும் டைரி எழுதும் பழக்கம், மன அழுத்தத்தைக் குறைக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.புத்தாண்டில் புதிய டைரியுடன் வாழ்க்கை பயணத்தை துவங்குவோம். அழுத்தமாக அன்றாட நிகழ்வுகளை பதிவோம்.- பாலாஜி