உள்ளூர் செய்திகள்

கண்கட்டு கல்வி!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், சிங்கனுார், அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், 1997ல், 7ம் வகுப்பில் படித்தேன். உடன் படித்த ஏனோக் ஹரிதாஸ் பார்வைக் குறைபாடு உடையவன். தட்டு தடுமாறி வகுப்புக்கு வந்து செல்வான். மதிய உணவு இடைவேளையில், அவன் மீது, மாட்டுச்சாணம் எறிவது, கல்லால் அடித்து துன்புறுத்துவது போன்ற கொடுஞ் செயல்களில் ஈடுபட்டனர் மாணவர்களில் சிலர். இது பற்றிய புகார், ஆசிரியர் சாமுவேல் பொன்ராஜிடம் சென்றது. சம்மந்தப்பட்ட மாணவர்களை மைதானத்துக்கு அழைத்து, துணியால் கண்களை கட்டி, சுற்றி வர சொன்னார்.செய்வதறியாது திகைத்தவர்களிடம், 'ஒரு நிமிடம் கூட பார்வை இல்லாமல் நடக்க முடியவில்லையே... பார்வையில்லாமல் பல கி.மீ., துாரத்தில் இருந்து பள்ளிக்கு வந்து செல்பவனை துன்புறுத்துவது நியாயமா...' என கேட்டார். பதில் சொல்ல முடியாமல் நின்றனர். பின், 'இனிமேல் இப்படி செய்ய கூடாது...' என அறிவுறுத்தி, கண் கட்டை அவிழ்த்து விட்டார். அனைவரும் அந்த மாணவனிடம் மன்னிப்புக் கேட்டனர்; அன்றிலிருந்து குறும்புத்தனம் செய்வதை விட்டு அன்புடன் பழகினர்.தற்போது என் வயது, 37; இச்சம்பவம் நடந்து, 25 ஆண்டுகள் ஆகி விட்டன; மாணவர்களின் குறும்புத்தனத்தை, எளிய வழிமுறையால் திருத்திய ஆசிரியரை இன்றும் மறக்க முடியவில்லை.- ரா.ராஜ்மோகன், விழுப்புரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !